மாஸ்கோ, செப். 3– சிரியாவில் தன்னை எதிர்த்து போராடும் பொதுமக்கள் மீது அதிபர் பஷர் அல்– ஆசாத் விஷ குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார். அதில் 1429 பேர் பலியாகினர்.
இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சிரியா மீது போர் தொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அதற்காக அமெரிக்காவின் விமானம் தாங்கி, 5 போர்க்கப்பல்கள் செங்கடல் நோக்கி விரைந்துள்ளன.
சிரியா மீது போர் தொடுப்பது குறித்து பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறவும் தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சிரியாவில் கடும் பதட்டம் நிலவுகிறது.
ஆனால் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தும் பட்சத்தில் எதிர் தாக்குதல் நடத்த தனது 3 போர்க்கப்பல்களை சிரியாவுக்கு அனுப்பி உள்ளது.
இருந்தாலும், சிரியாவுடன் ஆன அமெரிக்க போரை தடுத்து நிறுத்தும் தீவிர முயற்சியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. அதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவு மந்திரி செர்னிலாவ்ரோவ் கூறும் போது, ‘‘போராட்டக்காரர்கள் மீது சிரியா விஷ குண்டுகளை வீசியுள்ளது என்ற அமெரிக்காவின் கருத்து திருப்தியளிக்கும் வகையில் இல்லை.
விஷ குண்டு விவகாரத்தை காரணம் காட்டி சிரியா மீது அமெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது. எனவே, போரை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ள ரஷியா பாராளுமன்ற எம்.பி.க்கள் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்ப அதிபர் விளாடிமின் புதின் முடிவு செய்துள்ளார்.
அக்குழு வருகிற 9–ந் தேதிக்கு முன்னதாக அமெரிக்கா செல்கிறது. ஏனெனில், போர் தொடுக்கும் தீர்மானத்தின் மீது 9–ந்தேதி அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கிறது. ரஷிய எம்.பி.க்கள் குழு அமெரிக்க எம்.பி.க்களுடன் நேரிலும், பாராளுமன்றத்திலும் பேசி சிரியா நிலையை புரிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.
இதற்கிடையே, அமெரிக்கா தாக்குதலை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஐ.நா.சபையை சிரியா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், உள்நாட்டு போர் மற்றும் அமெரிக்க தாக்குதல் மிரட்டல் காரணமாக சிரியாவில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தங்கியுள்ளனர்.
இது, சிரியா மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என ஐ.நா. தெரிவித்துள்ளது.