பர்மிங்காம், செப். 4- பெண்கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, போராடியதற்காக தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய், தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் மலாலா, தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொது நூலகம் பர்மிங்காம் நகரில் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் மலாலா கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், “நான் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து, அதன்மூலம் எனது அறிவாற்றலை நானே பெருக்கிக்கொள்வேன். பேனாக்களும், புத்தகங்களும் தீவிரவாததை தோற்கடிக்கும் ஆயுதங்கள். அறிவைவிட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை. எழுதப்பட்ட வார்த்தையைவிட அறிவுக்கு சிறந்த ஆதாரம் எதுவும் இல்லை” என்றார்.
பர்மிங்காமில் திறக்கப்பட்ட அதிநவீன நூலகத்தில் பலலட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் முதல் பதிப்புகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.