6 செப்டம்பர் – 2016ஆம் ஆண்டில் மீண்டும் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்றும், தனக்குப் பிறகு கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம்தான் தலைமைப் பொறுப்பேற்பார் என்றும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், மீண்டும் மறு உறுதிப்படுத்தி அறிவித்ததைத் தொடர்ந்து, ம.இ.காவில் அரசியல் புயல் மீண்டும் வீச ஆரம்பித்து விட்டது.
தலைமைத்துவ மாற்றம் என்பது, இரண்டு பேருக்கு இடையிலானது மட்டுமல்ல, பிரதமரை வைத்து முடிவு செய்வது மட்டுமல்ல, மாறாக அதற்கு மத்திய செயற்குழு அங்கீகாரம் அளிக்க வேண்டும், கட்சி உறுப்பினர்களும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என திடீரென்று போர்க்கொடி தூக்கியுள்ள மத்திய செயலவை உறுப்பினரும், ம.இ.காவின் நீண்டகால உறுப்பினருமான டான்ஸ்ரீ கே.எஸ்.நிஜார், இந்த விவகாரம் பற்றி விவாதிக்க அவசர மத்திய செயலவையைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த தலைமைத்துவ மாற்றம் குறித்து இதுவரை பல்வேறு குழப்பமான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதால், இதுகுறித்து மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நிஜார் வலியுறுத்தியுள்ளார்.
“பழனியும், சுப்ராவும் அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டு, முடிவு செய்ய முடியாது. இதற்கு மத்திய செயலவையும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ம.இ.கா. ஒரு ஜனநாயக கட்சி. கட்சி ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்” என்றும் நிஜார் கூறியுள்ளதைத் தொடர்ந்து, ம.இ.காவில் ஏற்கனவே மையம் கொண்டிருந்த அரசியல் புயல் மீண்டும் விசுவரூபமெடுக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ம.இ.காவின் மத்திய செயலவைக்குத் தெரியாமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல் ஒரு தலைமைத்துவ மாற்றத்தை திணிப்பது, மத்திய செயலவையைத் தேர்ந்தெடுத்த ம.இ.கா. உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும் என்றும் நிஜார் சாடியுள்ளார்.
தலைமைத்துவ மாற்றம் குறித்து இதுவரை ஆறு விதமான வேறு வேறு அறிக்கைகளைத் தான் படிக்க நேர்ந்துள்ளதாகவும், இதனால் அனைவருக்கும் குழப்பமே மேலிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள நிஜாரின் கோரிக்கையின்படி கூட்டப்படவிருக்கும் மத்திய செயலவையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் அரங்கேறும் என்றும், அதனைத் தொடர்ந்து, ம.இ.காவில் அடுத்த கட்ட அரசியல் போராட்டங்கள் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பழனி-சுப்ரா இருவரின் அணிகளுமே, தேசியத் தலைவர் தேர்தலுக்கான பரவலான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டதாலும், நாடு முழுமையிலும் பிரச்சாரத்தில் பங்குகொண்டதாலும் தற்போது கட்சியில் கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகின்றது.
அதன் காரணமாகத்தான், இந்த தலைமைத்துவ மாற்றத்தை ஒப்புக் கொள்ளாத பழனிவேலுவின் ஆதரவாளர்கள், மத்திய செயலவையைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய செயலவை இந்த தலைமைத்துவ மாற்றத்திற்கு மறுப்பு தெரிவித்தால், அதனைத் தொடர்ந்து, பழனி 2016க்குப் பிறகும் தேசியத் தலைவராக நீடிக்கும் நிலைமை ஏற்படலாம் என்று ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.