கோலாலம்பூர், செப்டம்பர் 5 – வரும் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகும் ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கடந்த வாரம் அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்திய டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், இன்று அடுத்த ம.இ.கா தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று மீண்டும் அறிவித்திருக்கிறார்.
மேலும், தனக்குப் பிறகு நடப்பு துணைத் தலைவரான டாக்டர் சுப்ரமணியம் அந்த பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
“நான் எனது பதவியிலிருந்து ஓய்வு பெறத்தான் விரும்புகிறேன். ஆனால் கிளைத் தலைவர்கள் என்னை வற்புறுத்துகிறார்கள்” என்று பழனிவேல் தெரிவித்தார்.
அதோடு, தற்போது கட்சியை மேலும் ஜனநாயக முறைப்படி ஆக்குவதில் தன்னுடைய முழு கவனமும் இருக்கிறது என்றும் பழனிவேல் கூறினார்.
ம.இ.கா வின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உதவித்தலைவர் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மாநில தலைவர் மற்றும் கிளைத்தலைவர்களுக்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறும் என்று பழனிவேல் தெரிவித்தார்.
அதன்படி, வரும் 2015 ஆம் ஆண்டு மாநிலத் தலைவர்கள் மற்றும் கிளைத்தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறும், அதேநேரத்தில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உதவித்தலைவருக்கான தேர்தல் வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறும்.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கு பழனிவேல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கிளைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் தான் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகும் பதவியில் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்ற திடீர் அறிவிப்பை பழனிவேல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.