கோலாலம்பூர், செப் 6 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கும், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே நடைபெறவிருந்த தேசிய ஒற்றுமை பேச்சுவார்த்தையின் போது அன்வாருக்கு துணைப் பிரமர் பதவி கொடுக்க நஜிப் முன்வந்ததாக பிகேஆர் இளைஞர் அணி உதவித் தலைவர் முகமது நஸ்ரி முகமது யூனூஸ் கூறினார்.
இருப்பினும், நஜிப் துன் ரசாக்கும், அன்வாரும் நேரில் சந்தித்துப் பேசவில்லை என்றாலும், மூன்றாவது நபர் மூலமாக அன்வாரை சந்திக்கும் முயற்சியில் நஜிப் இறங்கியதாகவும் நஸ்ரி தெரிவித்தார்.
மேலும், மக்கள் கூட்டணியைச் சேர்ந்த 4 முக்கியத் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் நஜிப் முன்வந்ததாகவும் அவர் கூறினார்.
மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவதை இளைஞர் அணி மிகவும் வரவேற்பதாகவும், இதற்கு பாஸ் மற்றும் ஜசெக ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் நஸ்ரி குறிப்பிட்டார்.
அந்த பேச்சுவார்த்தையின் போது எண்ணெய் விலை உயர்வு, பொருட்கள் விலை உயர்வு, தேசிய கடனுதவித் திட்டம், தேசிய கல்வி முறை, பொருளாதாரம், மேம்பாடு, பாதுகாப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த சந்திப்புக்கு அம்னோவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க இந்த சந்திப்பு மிக அவசியம் என்றும் நஸ்ரி கூறினார்.