Home இந்தியா இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இன்றைய தீர்ப்பு தீர்வாகுமா?

இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இன்றைய தீர்ப்பு தீர்வாகுமா?

633
0
SHARE
Ad

i-4

செப்டம்பர் 13 – என்றைக்கு ஒரு பெண் இரவு நேரத்தில் தனியாக வீதியில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக உணர்கிறாளோ அது தான் உண்மையான சுதந்திரம் என்ற மகாத்மாவின் அவா உருப்பெறாமலே போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நிலுவையிலுள்ள இருபத்திநான்காயிரம் வழக்குகளில், சமீபத்தில் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது டெல்லி மாணவியின் கற்பழிப்பும் அதைத் தொடர்ந்து அவளின் மரணமும். மக்கள் முன்வைத்த பெரும் போராட்டங்களுக்கு விடியலாக சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என்று நீரூபிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

டிசம்பர் 16 துயர சம்பவம்

#TamilSchoolmychoice

film-delhi-gang-rape-647x450

கடந்த ஆண்டு டிசம்பர் 16 ம் தேதி, நண்பருடன் படம் பார்க்கச் சென்ற மகள் நெடுநேரமாகியும் வீடுதிரும்பவில்லை என்ற பதைபதைப்புடன் காத்திருந்த பெற்றோருக்கு அதிர்ச்சித் தகவல் ஒன்று வந்து சேர்ந்தது. அவள் ஆறு மனித மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தி தான் அது.

சாலையோரத்தில் வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியையும், அவரது நண்பரையும் காவல்துறையினர் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். (காவல்துறையினர் வரும் வரை அங்கு நிறைய பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது ஒரு தனிக்கதை)

குடல் பகுதியில் கடும் தாக்குதலுக்காலான அந்த மாணவி உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளித்தாள். அந்த மாணவி கடைசியாகக் கூறிய வார்த்தை “நான் வாழவிரும்புகிறேன்” என்பது தான். ஆனால் அதன் பின்பு டிசம்பர் 29 ஆம் தேதி நுரையீரல் தொற்றுகாரணமாக அனைத்து உறுப்புகளும் செயலிழக்கத்தொடங்கியதால் அதிகாலை 2.15 மணியளவில் மரணித்தாள். அவளது மறைவிற்கு ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கத்தையும், அதிகாரவர்க்கம் ஆளும் வர்க்கத்தையும் குறை கூறி தங்கள் கரங்களை கறைபடியாமல் பார்த்துக்கொண்டன.

மக்களின் போராட்டம்

178355090

மாணவியின் மரணத்திற்குப் பின் மக்கள் முன் வைத்த மிகப்பெரிய போராட்டங்கள் நாடெங்கும் ஓங்கி ஒலித்தது. மாணவிக்கு நடந்த சம்பவம் ஜீரணிக்கவே இயலாத ஒன்றுதான். ஆனால் இந்தியாவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. திரௌபதி காலம் தொட்டு இன்று வரை பெண்களுக்கெதிராக பாலியல் வன்முறைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. டெல்லி மாணவியின் சம்பவத்தில் 17 வயது சிறுவனும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளான். முகத்தில் பூனை முடி முளைத்ததனால் மட்டுமே தன்னை ஆணாக கருதினானா என்பது தெரியவில்லை, ஒரு பெண்ணை இத்தகைய கொடுமைக்கு ஆளாக்க அந்த சிறுவனுக்கு தைரியம் கொடுத்தது யார்? சமூகமும், மதுபோதையும் தான்.

தூக்கு தண்டனை தீர்வாகுமா?

Tamil-Daily-News-Paper_14211237431

டெல்லியில் சென்றாண்டு மட்டும் சுமார் 572 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தை முதல் பல்போன கிழவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்ற பொழுது, இந்தியா ஆன்மீக தேசமா? இதுபோன்ற அவலங்கள் நிகழும் தேசமா? அச்சம் தோன்றுகிறது.

இறந்த மாணவியின் உடலுக்கு மலர்வளையமும், தலைவர்களின் இரங்கல் செய்திகளும், அதிகபட்சமாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மட்டுமே தீர்வாகுமா?

இந்த நான்கு பேருக்கு தூக்கு தண்டனை வழங்கிவிட்டால் இந்த தேசத்தில் பாலியல் பலாத்காரம் என்பதே இல்லாமல் போய் விடுமா?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இது போல் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குபவர்கள் வெளியே தெரிந்தும் தெரியாமலும் பலர் இருக்கிறார்கள்.

டில்லி மாணவிக்கு ஏற்பட்ட இந்த துயரத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள், அண்மையில் மும்பை சக்தி மில்ஸ் பகுதியில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

எனவே, நாட்டை ஆள்பவர்கள் தொடங்கி கீழ்மட்டத்திலிருக்கும் முதல் குடிமகன் வரை மிகப்பெரிய சமூக மாற்றம் வேண்டும். பெண்களை காமம் சார்ந்த போகப் பொருளாக பார்க்கும் நிலை மாறினால் மட்டுமே இத்தகைய கொடுமைகள் நீங்கும். இந்தியாவில் பெண்களைத் தெய்வமாக மதிக்கின்றோம் என மார்தட்டும் சமூக நம்பிக்கைகளின் முகத்திரையை கிழிக்கின்றது டில்லி மாணவியின் சம்பவம்.

டில்லி மாணவி வழக்கில் இன்று அந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டால், இந்த வழக்கிற்கு வேண்டுமானால் முடிவு கிடைக்கலாம்.

ஆனால் இந்தியாவில் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் இன்றைய தீர்ப்போடு முடிவுக்கு வந்துவிடுமா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.

– சி. சுரேஷ்குமார், தமிழக வாசகர்.