மலாக்கா, செப் 13 – மலாக்காவில் நேற்று குண்டர் கும்பல் 04 மற்றும் 36 ஐச் சேர்ந்தவர்கள் என சந்தேகப்படக்கூடிய ஆடவர்கள் இருவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நேற்று காலை 9.20 மணியளவில் பெரோடுவா மைவி ரகக் காரில் வந்த அவ்விருவரையும் காவல்துறையினர் விசாரிக்க முயற்சி செய்கையில், அவர்கள் திடீரென காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் உடனடியாக காவல்துறையினர் திருப்பி சுடத்தொடங்கினர். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் அவ்விரு ஆடவர்கள் கொல்லப்பட்டனர்.
தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.
அவர்கள் ஓட்டி வந்த காரில் இருந்து இரண்டு துப்பாக்கிகளும், சில போதைப் பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த இரு நபர்களும் 7 கொலைகள், கொலைமுயற்சி மற்றும் இரண்டு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் “டெராடாய் பாய் ஜோகூர்’’ என்ற புனைப்பெயரில் உள்ளவர் என்றும், அவர் மீது 10 குற்ற வழக்குகள் உள்ளதாகவும் காலிட் குறிப்பிட்டார்.
மற்றொருவர் போதை மருந்து தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் காலிட் கூறினார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து ஆயர் கெரோவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனையை மேற்கொண்ட காவல்துறை, அங்கு 34 மற்றும் 35 வயதுடைய தம்பதிகள் இருவரை பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
அதோடு அந்த வீட்டில் இருந்து பிஎம்டபிள்யூ ரக கார் ஒன்றையும், போலி காவ்துறை முத்திரைகளையும், கொள்ளை சம்பவங்களுக்குப் பயன்படுத்த உதவும் சில ஆயுதங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக காலிட் தெரிவித்தார்.