Home இந்தியா ஈழ தமிழர் வாழ்வாதாரத்திற்காக விரைவில் சர்வதேச மாநாடு: கருணாநிதி அறிவிப்பு

ஈழ தமிழர் வாழ்வாதாரத்திற்காக விரைவில் சர்வதேச மாநாடு: கருணாநிதி அறிவிப்பு

605
0
SHARE
Ad
karunanithi
திருச்சி,பிப்.9- திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரெயில்வே மைதானத்தில் நேற்று இரவு திருச்சி மாவட்ட தி.மு.க சார்பில் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் மாவட்ட தி.மு.க சார்பில் 5 கோடி ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
நிதியை பெற்றுக்கொண்டு கருணாநிதி பேசியதாவது:
“இலங்கை தமிழர்களின் நிலை பற்றி நமது கவலையை உலகுக்கு உணர்த்தி இருக்கிறோம். டெசோ அமைப்பின் மூலம் உலக நாடுகளுக்கும் தெரியப் படுத்தி வருகிறோம். அவர்களது நலவாழ்வுக்காக கோரிக்கை வைத்து இருக்கிறோம். 56 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி வரும் நம்மை பார்த்து சிலர், நாம் ஈழத் தமிழர்களுக்கு விரோதி போல் பேசுகிறார்கள்.”
“இலங்கையிலே போர் நடந்த போது நாம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று சொல்கிறார்கள், ஏதோ அவர்கள் கடற்கரையில் நின்று கொண்டு கையில் துப்பாக்கியுடன் சண்டையிட்டு தடுத்ததை போல் பேசுகிறார்கள். எனவே ஈழத்தமிழர்களுக்காக நாம் நடத்திய போராட்டங்களை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.”
“இலங்கையில் தற்போது 99 கிராமங்களின் தமிழ் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. தமிழினத்தை அழிக்க முதலில் தமிழ் மொழி மீது சிங்களர்கள் கைவைத்து இருக்கிறார்கள். இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம். அந்த கடிதத்திற்கு ‘நாங்கள் கவனிக்கிறோம்‘ என்று பதில் வந்து இருக்கிறது.”
“இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் அந்நாட்டு அதிபர் சொல்வது போல் விடுதலை அல்ல சுயாட்சி கேட்டு தான் கோரிக்கை வைத்து உள்ளனர். அந்த கோரிக்கையை தான் தி.மு.க.வும், டெசோ அமைப்பில் உள்ள கட்சிகளும் டெல்லியில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கொடுத்தன.”
“ஈழ தமிழர்களின் வாழ்வுரிமை, வாழ்வாதாரத்திற்காக விரைவில் பெரிய மாநாடு கூட இருக்கிறது. அந்த மாநாட்டில் சர்வ தேசங்களும் கலந்து கொள்ள இருக்கின்றன. அந்த மாநாட்டில் ஈழத் தமிழர்களுக்காக தமிழர்களின் குரல் ஒலிக்கும். தி.மு.க.வின் குரல் ஒலிக்கும்.”
“டெசோ சார்பில், டெசோவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் குரல் ஒலிக்கும். ஈழ தமிழர்களை நாம் தான் பாதுகாக்கவேண்டும். அதற்காக அகிம்சை வழியில் அமைதி வழியில் போராடுவோம். போராடிக் கொண்டே இருப்போம். இந்த கூட்டம் தேர்தல் நிதி பெறும் கூட்டம் மட்டும் அல்ல. இலங்கை தமிழர்களுக்கு ‘தேறுதல்‘ தரும் கூட்டமும் ஆகும் என கூறி விடைபெறுகிறேன்.”