கோலாலம்பூர், செப் 23 – அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடாததன் காரணம் அரசாங்கம் தொடர்புடைய நிறுவனத்தில் தலைவர் பதவி ஏற்பது தான் என்று கூறப்படுவதை டத்தோஸ்ரீ அஸலினா ஒத்மான் மறுத்துள்ளார்.
தன்னைப் பற்றி இவ்வாறு கருத்து கூறிய கெஅடிலான் மகளிர் பிரிவுத் தலைவர் ஜுரைடா கமாருதீனுக்கு பதிலடி கொடுத்த அஸலினா, “இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது சுமத்துபவர்கள் அதற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்” என்று சவால் விடுத்துள்ளார்.
மேலும், “நான் போட்டியிடாததற்கு என் கட்சியின் மீது நான் வைத்துள்ள அன்பு தான் காரணம். இந்த முடிவை எடுப்பதற்கு முன் கட்சியில் பலரிடம் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டேன். எனது முடிவால் அம்னோவில் ஒற்றுமை நிலைக்கும் என்று நம்புகிறேன் ” என்று அஸலினா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் புதன்கிழமை பிகேஆரின் உறுப்பு நாளேடான ‘கெஅடிலான் டெய்லி’ இல் இது குறித்து கருத்துரைத்திருந்த ஜுரைடா, நட்பு ரீதியான சில உடன்படிக்கைகளின் காரணமாக அஸலினா போட்டியிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.
புத்ரி அம்னோ நிறுவனத் தலைவரான அஸலினா, நடப்பு அம்னோ உச்ச மன்ற உறுப்பினரும் ஆவார். கட்சியில் மிகப் பெரிய முடிவுகளை எடுக்கும் குழுவில் அஸலினா, பிரதமர் நஜிப் துன் ரசாக்காலும், முன்னாள் அம்னோ தலைவரான துன் டாக்டர் மகாதிர் முகமட்டாலும் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.