கோலாலம்பூர், செப் 23 – மறைந்த முன்னாள் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி மிக உறுதியாக இருக்கிறார்.
இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சாஹிட், “ அஸ்தி ஒரு பெரிய விஷயமல்ல. அதை மலேசியாவிற்குள் அனுமதித்தால் அதை வைத்து ஒரு நினைவு மண்டபமே கட்டிவிடுவார்கள். அது தான் எங்களுக்கு பிரச்சனை” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு மலேசியா – தாய்லாந்து இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஹாட்யாய் ஒப்பந்தத்தின் படி, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பலர் மலேசியாவிற்கு திரும்பினர். ஆனால் சின் பெங்கை மட்டும் மலேசியாவிற்குள் நுழைய புத்ரஜெயா தடை விதித்தது.
அதனால் தனது வாழ்நாளில் பல வருடங்களை சின் பெங் தாய்லாந்திலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சின் பெங்கின் இறுதிச்சடங்கை அவரது பிறந்த ஊரான பேராக் மாநிலம் சித்தியவானில் செய்ய மலேசியா அனுமதிக்க மறுத்ததால், இன்று தாய்லாந்திலேயே அவரது இறுதிச்சடங்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.