அலகாபாத்தில் பிறந்து தற்போது இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரியும் விகாஸ் ஸ்வரூப் தனது நாவல்கள் மூலம் பிரபலமானவர்.
இவருடைய நாவல்களில் குறிப்பிடத்தக்கவை ‘க்யூ& எ’ மற்றும் ‘சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ்’ என்ற நாவல்கள் ஆகும்.
இவரது ‘க்யூ& எ’ நாவலைத் தழுவிதான் ஆஸ்கார் விருது பெற்ற டேனி பாயலின் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ திரைப்படம் எடுக்கப்பட்டது.
தற்போது இவரது ‘சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ்’ நாவலைத் தழுவி ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அர்ஜெண்டினாவின் திரைப்படத் தயாரிப்பாளரான பாப்லோ டிரப்பிரோ தயாரிக்க உள்ளார்.
இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாகத் தெரிகின்றது.
வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் படத்தின் தயாரிப்பு தொடங்க உள்ளது.
இந்த விபரங்களை கன்னடத் தயாரிப்பாளரும், பிரகாஷ் ராஜின் நெருங்கிய நண்பருமான பீசு சுரேஷா தனது இணையதளத் தகவலில் வெளியிட்டு நண்பர் பிரகாஷ்ராஜை வாழ்த்தியுள்ளார்.
இந்த நாவலில் உள்துறை மந்திரியின் மகன் விருந்து ஒன்றில் கொலை செய்யப்படுவதும், அதில் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் குறித்தும் கதை செல்லுவதாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தான் இயக்கி நடிக்கும் மூன்று மொழித் திரைப்படத்தில் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார்
கன்னடத்தில் ‘ஒகரானே’, தமிழில் ‘உன் சமையல் அறையில்’ மற்றும் தெலுங்கில் ‘உள்வசாறு பிரியாணி’ என்ற தலைப்புகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.