Home உலகம் ஒபாமாவுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை: பாதுகாப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன

ஒபாமாவுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை: பாதுகாப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன

446
0
SHARE
Ad

வாஷிங்டன், செப். 27- அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றுள்ளார். முதலில், அவர் தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார்.

Manmohan-Singh-Obamaஅங்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை அவர் நாளை சந்தித்துப் பேசுகிறார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது, இது 3–வது தடவை ஆகும். ஒபாமாவின் பதவிக்காலத்தில் மன்மோகன்சிங் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது, இது 2-வது தடவை ஆகும்.

#TamilSchoolmychoice

முதலில், ஒபாமாவும், மன்மோகன்சிங்கும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

அமெரிக்க விசா விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக, இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் பாதிக்கப்படுவது குறித்த இந்தியாவின் கவலைகளை மன்மோகன்சிங் எடுத்துக் கூறுவார் என்று தெரிகிறது.

ஆக்கப்பூர்வ அணுசக்தி தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு போன்றவற்றில் வருங்கால ஒத்துழைப்பு பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஏற்படும் நிலவரம் உள்ளிட்ட தெற்கு ஆசிய விவகாரம் குறித்தும், சிரியா உள்ளிட்ட சர்வதேச விவகாரம் குறித்தும் இருவரும் விவாதிக்கிறார்கள்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, இரு நாடுகளின் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பின்னர், இருதரப்புக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அவற்றில், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களும் அடங்கும். பின்னர், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒபாமா மதிய விருந்து அளிக்கிறார்.

மேலும், பிரதமரின் மனைவி குர்சரண் கவுருக்கு ஒபாமாவின் மனைவி மிச்செல், தனியாக தேநீர் விருந்து அளிக்கிறார். இதுபோன்று அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி தேநீர் விருந்து அளிப்பது, அபூர்வமானது ஆகும். இது, ஒபாமா–மன்மோகன்சிங் இடையிலான பிணைப்பைக் காட்டுவதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மன்மோகன்சிங்கை சந்திக்க ஒபாமா ஆர்வமாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கர்னி நிருபர்களிடம் தெரிவித்தார். பொதுவான நோக்கங்கள் மற்றும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர் கூறினார்.