Home அரசியல் இலவசக் கல்வி – சரவணனுக்கு சேவியர் பதிலடி!

இலவசக் கல்வி – சரவணனுக்கு சேவியர் பதிலடி!

477
0
SHARE
Ad

Xavier-Feature

பிப்ரவரி 9 – பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏன் இலவசக் கல்வியை செயல்படுத்தவில்லை என ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் கேட்டுள்ளதற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் (படம்) பதில் கொடுத்துள்ளார்.

“பக்காத்தான் மத்திய ஆட்சியைக் கைப்பற்றினால் நாட்டில்  இலவசக் கல்வித் திட்டத்தைச் செயல் படுத்தும் என்ற டத்தோ ஸ்ரீ அன்வாரின் வாக்குறுதி குறித்து  தமிழ்ப் பத்திரிக்கைகளில் கேள்வி எழுப்பியுள்ள ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும் துணையமைச்சருமான டத்தோ சரவணன், பக்காத்தான் ஆட்சியிலுள்ள  வளமான சிலாங்கூரில் இப்பொழுதே அதனை ஏன் செயல் படுத்தவில்லை என்று கேட்கிறார்”

#TamilSchoolmychoice

“டத்தோ சரவணனின் சவாலுக்குத் தக்க ஆதாரத்துடன் சரியான புள்ளி விவரங்களுடன் பதிலை  வழங்க நாங்கள் தயார், ஆனால் பதிலுக்கு நாங்கள் எதிர் சவால் விட்டால் அதனை எதிர் கொள்ள டத்தோ சரவணனால் முடியுமா? அவரின் பதிலைத்தான் தேசிய முன்னணி, தனது ஒட்டு மொத்த இயக்கத்தின் பதிலாக ஏற்க முன் வருமா? தன் பதிலுக்கு தேசிய முன்னணியை பாரிசானை பொறுப்பு ஏற்கச் செய்யத்தான் சரவணனால் முடியுமா? என்பதனை அவர் சிந்தித்திருந்தால் இந்தக் கேள்வியை அவர் கேட்டிருக்க மாட்டார்? இந்தியச் சமுதாயத்திற்குப் பயனான இலவச உயர் கல்வியை ம.இ.கா ஏற்றுக்கொள்கிறதா இல்லையா ? என்பதையே அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்” என்று சேவியர் தனது பதில் அறிக்கையில் கூறியிருக்கின்றார்.

“ம.இ.கா தலைவர்களின் அறிக்கைகளை மக்கள் கவனித்தே வருகின்றனர். அவர்களின் அறிக்கைகள் மிகவும் பரிதாபத்திற்கு உரியவைகளாக இருந்து வருகிறது. டத்தோ சரவணன் இந்தச் சமுதாயத்தின் மீது பற்றும் பாசமுள்ளவராக இருந்தால், அவர் சிந்திக்க வேண்டியது ஏழை இந்தியச் சமுதாயத்திற்கு இலவச உயர்கல்வி அவசியமா இல்லையா? என்பதைப் பற்றித்தான். அதனை வழங்கும் சக்தி இந்நாட்டுக்கு உண்டா இல்லையா?  இலவச உயர் கல்வியினால் இந்தியச் சமுதாயத்திற்குப் பயன் உண்டா இல்லையா?  என்பதையே அவர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று சேவியர் மேலும் தனது பதில் அறிக்கையில் கூறியுள்ளார்.

“இலவச உயர்கல்வி ஏழை இந்தியச் சமுதாயத்திற்கு மிக அவசியம் என்பதனை ஒப்புக்கொண்டால், இலவச உயர்கல்விக்கு  முதலில்  உங்கள் ஆதரவைப் பகிரங்கமாக வெளியிடுங்கள், அதன் பின் உங்கள் ம. இ.காவையும்  ஆதரவு கொடுக்க வற்புறுத்துங்கள். அதன் பின் உங்கள் தேசிய முன்னணியைப் பாருங்கள்” என்றும் சேவியர் சரவணனைக் கேட்டுக் கொண்டார்.

“அல்லது இலவச உயர்கல்வியை நீங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதனையாவது சொல்லிவிடுங்கள். நீங்கள் லாரிகளிலிருந்து நமது முதியோர்களை நோக்கி விட்டெறியும் அரிசி மூட்டை மட்டுமே நமது உரிமை என்று எண்ணியிருந்தால், அதையாவது சொல்லிவிடுங்கள். எப்படியோ இலவச உயர் கல்வி  விவகாரத்தில்  என்ன உங்கள் நிலைப்பாடு என்பதனை  மக்களுக்குத் தெளிவு படுத்துங்கள்” என்றும் சேவியர் சரவணனுக்கு சவால் விடுத்தார்.

“அதை விட்டு உங்கள் சுய  அரசியல் வாழ்வுக்காக, நீங்கள் பிரதிநிதிப்பதாக கூறிக் கொள்ளும்  இந்தியச் சமுதாயத்தின் விருப்பத்தைக் கொல்லாதீர்கள். இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இலவச உயர் கல்வி பயனளிக்கும் என்ற ஆணித்தரமான சமுதாயத்தின் நம்பிக்கையைத் தகர்த்து இன்னும் 55 ஆண்டுகளுக்கு இச்சமுதாயத்தின்  கண்களைக் கட்டி காட்சி நடத்திட ஆசைப்படக்கூடாது. அது உங்களுக்கு வாழ்வளித்த இந்தியச் சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் மகா பாதகமாகும்.”

“நம் மக்களின் தேவை எதுவோ, அதை நிறைவேற்றுவது ஆட்சியின் சிறப்பு” என்று கூறிய சேவியர் தொடர்ந்து ” மக்களின் நோக்கத்தை அடைய திட்டம் தீட்டி செயல் படுவதுதான் அரசாங்கத்தின் பணி. அதற்கு நாட்டையும் மக்களையும் தயார் படுத்துபவர்களே நல்ல தலைவர்கள்! மற்ற எல்லோரும் என்ன என்பதனை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிலறிக்கைக்கு காத்திருக்கிறேன்,  இந்தச் சமுதாயத்தின் நலன் கருதி எல்லாத் தமிழ் தினசரிகளும்  என் பதிலை இருட்டடிப்பின்றி வெளியிடும்  என்று நம்புகிறேன்” என்றும் ஸ்ரீ அண்டலான் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சேவியர் ஜெயகுமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.