Home 13வது பொதுத் தேர்தல் அடுத்த கெராக்கான் தலைவர் யார்?

அடுத்த கெராக்கான் தலைவர் யார்?

763
0
SHARE
Ad

Chang-Ko-Youn-642x487கோலாலம்பூர், அக் 16- அக்டோபர் 26 இல் நடக்கவிருக்கும் கெராக்கான் கட்சியின் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும், ஆனால் சுமூகமான முறையில் அதிகாரம் கைமாறும் என தாம் நம்புவதாகவும் கட்சியின் இடைக்காலத் தலைவரான டத்தோ சாங் கோ யோன் நேற்று கூறினார்.

உதவித் தலைவரும் இடைக்கால தலைமைச் செயலாளருமான டத்தோ மா சியூ கியோங்கிற்கும், கெராக்கானின் புதிய பினாங்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முன்னாள் தலைமைச் செயலாளரான தெங் சாங் இயோவிற்கும் இடையே போட்டி இருக்குமென்று பரவலாகப் பேசப்படுகிறது.

தாம் போட்டியை தவிர்க்க விரும்புவதாகவும், வழிவிடுவதன் வழி சுமூகமான பதவி கைமாறுவது தற்போதைய சூழ்நிலைக்கு நல்லது என்றும் இதனால் மீண்டும் ஒரு பதவி சண்டை கட்சியில் நிகழக்கூடாது என்றும் பெர்னாமாவிடம் சாங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கட்சிக்கு தலைமை தாங்க இளம் தலைவருக்கு விட்டுக் கொடுப்பதாக 56 வயதான சாங் கூறினார். மாவிற்கு வயது 52. டெங்கிற்கு வயது 50. இருவருமே சாங்கை விட வயது குறைந்தவர்கள் . இதனால் சாங் இளம் தலைவர் என குறிப்பிட்டது யார் என கெராக்கானில் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் கெராக்கான் பல திறன்மிக்க தலைவர்களை உருவாக்கியுள்ளது. கட்சிக்கு புதிய அணுகுமுறை வியூகம் தோற்றத்தை அளிப்பதற்கு இந்த இளம் தலைவர்கள் தொடர்ந்து முயற்சியெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

காலஞ்சென்ற முன்னாள் தலைவர் துன் டாக்டர் லிம் கெங் எய்க்கோடு பல ஆண்டுகள் கட்சியில் இருந்த இவர், தொடர்ந்து  கட்சியை வழிநடத்தவிருக்கும் புதிய இளைய தலைமுறைக்கு  ஆதரவளித்து அவர்களின் பின்னால் நிற்பதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

டத்தோ சாங் கோ யோன் பேராக் மாநில கட்சியின் ஆட்சிக் குழு உறுப்பினராக மூன்று தவணைக்கு (1995-2004)க்கும் இளைஞர் பிரிவுத் தலைவராக (1996-1999)வும் மற்றும் துணைத் தலைவராக 2008லும் நியமிக்கப்பட்டார். கடந்த பொதுத் தேர்தலில் கட்சியின் படுதோல்வியை அடுத்து தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கோ சு கூன் பதவி விலகியதை அடுத்து சாங் தற்காலிகத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவியை விட்டு விலகிய பின் தாம் தொடர்ந்து கட்சிக்காக பாடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே தெங், தாம் தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ளத்தை சில தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் 2008 ஆண்டில் நடைபெற்ற கட்சியின் உதவித் தலைவர் தேர்தலில் அதிகப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றிருப்பதால் பலரும் அவரை விரும்புவதாகவும் அவர் கட்சியின் ஆட்சிக் குழுவில் உறுப்பியம்  பெற்று கடந்த செப்டம்பர் 15இல் பினாங்கு மாநில கெராக்கான் தலைவர் பதவியை ஏற்றார்.

தெலுக் இந்தான் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினராக (1999-2008) பதவி வகித்த டத்தோ மா சியூ துணை அமைச்சராகவும் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் (2002-2008) மே 11 இல் பதவியை விட்டு விலகிய தெங்கிற்கு பதிலாக கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.