அக்டோபர் 16 – உலகின் முக்கால் பாகத்தை ஆக்கிரமித்திருக்கும் கடல், மனிதன் இதுவரை கண்டுபிடித்திராத பல்வேறு அதிசயங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது என விஞ்ஞானிகள் எப்போதும் கூறிவந்துள்ளனர்.
அதற்கு ஏற்றாற்போல், மாயா ஜால கதைகளில் வருவதைப் போன்று 18 அடி நீளம் கொண்ட கடல் நாகம் போன்ற கடல் விலங்கொன்றின் உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
15க்கும் மேற்பட்ட உதவியாளர்களின் துணையோடு அந்த கடல் நாகத்தின் உடலை கரைக்கு இழுத்துச் சேர்த்ததாக சம்பந்தப்பட்ட கடல்புற ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் சந்தானா என்பவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் வாழ்நாளில் நிகழ்ந்த முக்கிய கண்டுபிடிப்பாக இந்த விலங்கை கண்டெடுத்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக மேற்காணும் புகைப்படத்தை கட்டாலினா தீவு கடல்சார் ஆய்வு மையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 13ஆம் நாள் வெளியிட்டுள்ளது.
கடல் விஞ்ஞான பயிற்சியாளர் ஒருவர் கடலுக்கடியில் நீந்திக் கொண்டிருந்த போது இந்த கடல் விலங்கின் சடலத்தைக் கண்டார்.
இந்த கடல் விலங்கினம் “ஓர்” (oarfish) என்ற மீன் இனத்தைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய மீன் இனம் மிகவும் அபூர்வம் என்றும் இவை குறித்த ஆய்வுகள் மிகக் குறைவான அளவிலேயே மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் கடலுக்கடியில் 3,000 அடி ஆழத்திலேயே அவை நீந்திச் செல்லும் என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய மீன் இனம் மூன்று அடி நீளமே இருந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, இவ்வளவு பெரிய அளவில் இந்த மீன் இனம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கருதப்படுகின்றது.
இருப்பினும், இந்த மீன் இனம் 50 அடி நீளம் வரை வளரக் கூடியது என்றும் புராண கால கடல் நாக கதைகளுக்கு மூல காரணமாக இவை இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்ட பின்னர் இந்த கடல் விலங்கின் சடலம் மண்ணில் புதைக்கப்படும். சில காலம் கழித்து அதன் எலும்புக் கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்படும் என்றும் இதனைக் கண்டெடுத்த ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.