Home நாடு “கட்டளைகளுக்குக் கீழ்படியாத உதயகுமார் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்” – சிறை நிர்வாகம் அறிக்கை

“கட்டளைகளுக்குக் கீழ்படியாத உதயகுமார் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்” – சிறை நிர்வாகம் அறிக்கை

469
0
SHARE
Ad

uthayakumar

கோலாலம்பூர், அக் 25 – தேச நிந்தனை வழக்கில் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார், 13 நாட்கள் தனிமைச்சிறையில் மாற்றப்பட்டது தொடர்பாக சிறை நிர்வாகம் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அதில், சிறை அதிகாரிகளின் கட்டளைகளை ஏற்க மறுத்ததால் தான் உதயகுமார் 13 நாட்களுக்கு தனிமை சிறையில் அடைக்கப்பட்டதாக சிறை நிர்வாகம் காரணம் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், உதயகுமார் கூறுவது போல் இருட்டறையில் அடைக்கப்படவில்லை என்றும் சிறை நிர்வாகம் மறுப்பு  தெரிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை துணையமைச்சர் வான் ஜுனைடி துங்கு ஜாபர் நேற்று நாடாளுமன்றத்தில் சிறை நிர்வாகத்தின் கடிதத்தை வாசித்தார் அதில், “காஜாங் சிறையிலோ அல்லது வேறு எந்த சிறையிலோ உதயகுமார் இருட்டறையில் அடைக்கப்படவில்லை. அது போன்ற இருட்டறை சிறைகள் மலேசியாவில் இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தனிமைச் சிறையிலும் மெத்தை, போர்வை மற்றும் கழிவறை வசதிகள் இருந்ததாகவும், மற்ற கைதிகளுக்கு வழங்குவது போல் அதே உணவு தான் உதயகுமாருக்கும் வழங்கப்பட்டதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், உதயகுமாரின் நீரிழிவு நோயைக் கருத்தில் கொண்டு, ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படி அவருக்கு அரிசிக்குப் பதிலாக ரொட்டியும், காய்கறிகளும் வழங்கப்படுகின்றன என்றும், அவரது முதுகுத் தண்டு வடப் பிரச்சனைக்குத் தீர்வு காண கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அம்பாங் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI Scan) க்கு அனுப்பப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக உதயகுமாருக்கு அடுத்த மாதம் மீண்டும் முதுகுத் தண்டுவட தட்டு விலகல் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.

உதயகுமார் சிறையில் தனக்கு பல சித்திரவதைகள் நடப்பதாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தை, நாடாளுமன்றத்தில் அதே அமர்வு விவாதத்தின் போது ஜசெக பூச்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ வாசித்துக் காண்பித்தார்.