கோலாலம்பூர், அக் 26 – நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கிய இந்திய சமுதாயத்திற்கு ‘ரொம்ப நன்றி’ என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று நாட்டின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில் தெரிவித்தார்.
நாட்டில் இந்திய சமுதாயம் தொடர்ந்து வலுவுடன் இருப்பதற்கு அரசாங்கம் அதன் வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும், இந்திய சமுதாய பிள்ளைகளின் கல்விக்கும், தொழிற்கல்விக்கும் அரசாங்கம் 10 கோடி ரிங்கிட்டை ஒதுக்கிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் நஜிப் கூறினார்.
இந்த 10 கோடி வெள்ளியில் 2 கோடியே 80 லட்சம் வெள்ளியை 176 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள பாலர்பள்ளிகளுக்கு செலவிடப்படும் என்றும், 45 தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மனநல ஆலோசனை, தன்முனைப்பு, சிறப்பு வகுப்புகள் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.