கோலாலம்பூர், அக் 28 – இதுவரை அரசாங்கம் வழங்கி வந்த சீனிக்கான மானியத்தை 2014 ஆண்டு நிதி திட்டத்தின் படி நிறுத்திக் கொண்டதால், இனி நாட்டில் முக்கிய சீனி உற்பத்தி நிறுவனங்கள், குறிப்பாக அரசாங்கத்துடன் தொடர்புடைய சையத் மொஹ்தார் அல் புகாரி நிறுவனம் இதன் மூலம் 1 பில்லியன் ரிங்கிட் லாபம் அடையும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“மலேசியாவில் செண்ட்ரல் சுகர் மற்றும் பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸுக்கு சொந்தமான மலேசியன் சுகர் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் சீனி உற்பத்தியில் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்கின்றன.மானியம் இரத்து செய்யப்படுவதற்கு முன்பு வரை, இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் வரிவிதிப்புக்கு முந்தைய லாபம் 20 முதல் 25 சதவிகிதம் இருந்தது” என்று அன்வார் குறிப்பிட்டார்.
மலேசிய மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இதுவரை சீனி ஒரு கிலோவிற்கு வழங்கி வந்த 34 காசு மானியத்தை நிறுத்திக்கொள்வதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2014 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கை வாசிப்பில் அறிவித்தார்.