வாஷிங்டன், நவ 04 – அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த புதன்கிழமையன்று, தீபாவளியை ஆதரித்து தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. செனட் சபையில், செனட் இந்திய குழுவின் துணைத்தலைவர்களான மார்க் வார்னர், ஜான் கோர்னின் ஆகியோர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.
அதில், உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதல்முறையாக, அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் என்றும், அதில் இரு அவைகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும் தீபாவளிக்கு ஆதரவான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா தலைமையில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்கும் தீபாவளி விழா வரும் 5-ம் தேதி வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெள்ளை மாளிகை கடந்த சனிக்கிழமை தீபாவளியன்று வெளியிட்டது.
ஒபாமாவின் தீபாவளி வாழ்த்து
தீபாவளி குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
“இந்துக்கள், ஜெயின் இனத்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த வாரம் தீபாவளி கொண்டாட இருக்கிறார்கள். இந்தப் பெருநாளில் கொண்டாட்டங்களும், நல்ல சுவையான உணவுகளும், ஆட்டம் பாட்டங்களும் நமது வாழ்வில் சந்தோஷ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து நமது அன்பானவர்களோடு அதை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.”
“அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடங்கள் நிகழ்வது நமது தேசத்தில் பல பாரம்பரியங்களும், நம்பிக்கைகளும் இருப்பதை நினைவு படுத்துகின்றது. இது போன்ற விழாக்கள் நமது ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகின்றது.”
“எனவே இம்முறை நாடாளுமன்றத்தில் இரு அவை உறுப்பினர்களும் இணைந்து தீபாவளி கொண்டாடவுள்ளோம். இது அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.