புதுடில்லி, நவம்பர் 6- காலிஸ்தான் தீவிரவாதிகள் உதவியுடன், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் உயிருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., குறி வைத்துள்ளதாக, உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இணையான பாதுகாப்பு மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பிரசார கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில், ஆறு பேர் பலியாயினர். இதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டு வரும் ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை உயர்த்த வேண்டும்’ என, பா.ஜ.,வினர் கோரிக்கை வைத்தனர். உள்துறை அமைச்சகமும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய உளவு அமைப்பு ஒரு முக்கிய விஷயத்தை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: நரேந்திர மோடியின் உயிருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., குறிவைத்துள்ளது. பஞ்சாபில், முன் தனி நாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடி வந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை பயன்படுத்தி மோடியை கொலை செய்ய ஐ.எஸ்.ஐ., சதித் திட்டம் தீட்டியுள்ளது. இதையடுத்து, நரேந்திர மோடியின் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டு வரும், ‘இசட் பிளஸ்’ பாதுகாப்புக்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் ஏ.எஸ்.எல்., என அழைக்கப்படும், சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் படி, நரேந்திர மோடிக்கு 108 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிப்பர். ஒரு சுழற்சிக்கு 36 வீரர்கள் பாதுகாப்பு பணியை கவனிப்பர். இவர்கள் நரேந்திர மோடிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அளிப்பர். முதல் அடுக்கில் உள்ள வீரர்கள், மோடி மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்த்து பதில் தாக்குதலில் ஈடுபடுவர். இரண்டாவது அடுக்கில் உள்ள வீரர்கள் மோடியை சுற்றி நின்று பாதுகாப்பு அளிப்பர். மூன்றாவது பிரிவில் உள்ளவர்கள் மோடியை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வர். மோடி, குஜராத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்லும் போதெல்லாம் குஜராத் போலீசார், அந்தந்த மாநிலங்களின் போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்துவர். கூட்டம் நடக்கும் இடம், அந்த இடத்துக்கு செல்லும் வழி, கூட்டத்தில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்தும், ஆலோசனை நடத்துவர். இவ்வாறு, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.