Home உலகம் 6 மாத வீட்டு சிறை காவலில் இருந்து முஷரப் விடுதலை

6 மாத வீட்டு சிறை காவலில் இருந்து முஷரப் விடுதலை

491
0
SHARE
Ad

Musharraf_2540710b

இஸ்லாமாபாத், நவ 7- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 69) 6 மாத வீட்டு சிறை காவலில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

2007-ம் ஆண்டு, முஷரப் தனது ஆட்சியின்போது அவசரநிலையை அமல்படுத்தி 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார். இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் ஏற்கனவே இடைக்கால ஜாமீன் பெற்றிருந்த முஷரப் அதனை மேலும் நீட்டிப்பதற்காக உயர் நீதிமன்றத்துக்கு சென்றார்.

ஆனால், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. முஷரப்பை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவை செயல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கும் முன்னர் முஷரப்பை அவரது பாதுகாவலர்கள் அவசர அவசரமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

நீதிமன்றத்தில் இருந்து தப்பிய முஷரப் இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியான சக்‌ஷாஜத் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குச் சென்றார். அவரை கைது செய்வதற்காக அங்கு காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் 19-ம் தேதி காலை முஷரப் கைது செய்யப்பட்டார்.

சக்‌ஷாஜத் நகரில் உள்ள முஷரப்பின் பண்ணை வீடு கிளைச் சிறையாக அறிவிக்கப்பட்டது.

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, பலூசிஸ்தான் தலைவர் அக்பர் பக்தி கொலை வழக்கு ஆகியவற்றில் முஷரப்புக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், லால் மசூதி மதகுரு அப்துல் ரஷித் காஜி கொலை வழக்கிலும் அவரை ஜாமினில் விடுதலை செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து 6 மாத வீட்டு சிறை காவலில் இருந்து அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

முஷரப்பின் விடுதலையை அவரது தலைமையில் இயங்கி வரும் ஆல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அவரது வீட்டை கிளை சிறை என்று அறிவித்திருந்த உத்தரவும் திரும்பப் பெறப்பட உள்ளது. விரைவில் செய்தியாளர்களை முஷரப் சந்திப்பார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

எனினும், முஷரப் வீட்டை கடந்த 6 மாதங்களாக காவல் காத்து வந்த சிறை துறை காவல் அதிகாரிகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.

அதேபோல், பாகிஸ்தானை விட்டு முஷரப் வெளியேற உள்துறை அமைச்சகம் விதித்திருந்த தடையும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.