கோலாலம்பூர், நவ 11 – இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்து கொள்வது குறித்த விவகாரத்தை இவ்வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசவிருப்பதாக ம.இ.கா தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்துள்ளார்.
இலங்கை யுத்தத்தில் அப்பாவித் தமிழர்கள் பலர் இராணுவத்தினரால் வஞ்சிக்கப்பட்டதால் மலேசியா மற்றும் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்கள் இலங்கை மீது கடும் கோபத்தில் இருப்பதை தான் உணர்வதாகவும் பழனிவேல் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ வரும் வெள்ளிக்கிழமை நான் பிரதமரிடம் பேசுகிறேன். இந்த மாநாடு சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ, இந்தியாவிலோ நடைபெற்றால் ஏதோ பரவாயில்லை. ஆனால் இலங்கையில் நடப்பது அனைவரையும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது” என்று பழனிவேல் கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நஜிப் காமன்வெல்த் மாநாட்டிற்கு போக வேண்டாம் என்று மலாய் உரிமைக்குப் போராடும் பெர்காசா கட்சியின் தலைவர் இப்ராகிம் அலி கருத்துத் தெரிவித்திருப்பது குறித்து பழனிவேல் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.