கோலாலம்பூர், நவ 12 – இலங்கை காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் எடுத்துள்ள முடிவைப் போல் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் இங்கு வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வேதமூர்த்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்திருக்கிறார். அவரது முடிவைப் பாராட்ட வேண்டும். அந்த முடிவைப் போன்று நமது பிரதமரும் இலங்கை மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்களுக்கு செய்த கொடுமையை என்றும் மன்னிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்துகொள்ளக் கூடாது என்று இங்குள்ள பல்வேறு தமிழர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
நஜிப் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து கொண்டு இம்மாநாட்டைப் புறக்கணிக்கும் படி நேரடியாக பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருக்கும் ஒரே நபர் வேதமூர்த்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்னணி கூட்டணிக்கட்சிகளுள் ஒன்றான ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கூட நேற்று வெளியிட்ட அறிக்கையில், இவ்விவகாரம் குறித்து வரும் வெள்ளிக்கிழமை பிரதமரிடம் பேசவிருப்பதாக மட்டுமே அறிவித்துள்ளார். ஆனால் பிரதமர் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.