சென்னை, நவம்பர் 12- சினிமாவில் நடிப்பு தவிர மற்ற துறைகளில் பெண்களால் நீடிக்க முடியவில்லை அல்லது வெற்றி பெற முடியவில்லை என்கிற ஆதங்கம் பெரும்பாலான முன்னணி நடிகைகளிடம் உள்ளது. அதை சமீபத்தில் ஒரு பட விழாவில் சுஹாசினியும் வெளிப்படுத்தினார்.
அவர் பேசுகையில், நான், ராதிகா, சரிதா உள்ளிட்டோர் நடித்து வந்த காலகட்டத்தில் 10 படம் வந்தால் 5 படங்கள் கதாநாயகிகளை மையமாக கொண்டு அமைந்திருக்கும். அந்த மாதிரி படம் இயக்க கே.பாலசந்தர், பாரதிராஜா உள்பட பல இயக்குனர்கள் இருந்தனர். ஆனால், இப்போது அந்த நிலை மாறி விட்டது.
நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளே இல்லை. என்னதான் திறமையான நடிகைகளாக இருந்தாலும் பாடல்களுக்கு நடனமாட மட்டுமே அவர்களை பயன்படுத்துகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
தற்போது, ஸ்ரீப்ரியா மாலினி 22 பாளையங்கோட்டை படத்தை இயக்கியிருக்கிறார். இதேபோல் அதிகமான கதாநாயகிகளை கொண்டு இயக்குனர்கள் நல்ல படங்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
நீண்ட இடைவேளைக்குப்பிறகு ஸ்ரீப்ரியா அந்த முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற கதை என்பதால், கண்டிப்பாக தமிழிலும் வெற்றி பெற்று அதன்பிறகு கதாநாயகி முதன்மைபடுத்தும் கதை தமிழில் மீண்டும் ஒரு மரியாதையை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று நம்புகிறேன் என்றார்.