கோலாலம்பூர், நவ 13 – பிரதமர் துறையில் துணையமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதல் அரசாங்க முடிவுகளில் அவ்வப்போது மென்று முழுங்கி கருத்துத் தெரிவித்து வந்த ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தற்போது அமைச்சர்களை வெளிப்படையாகவே சாடத் தொடங்கியுள்ளார்.
ஜாலான் பி.ரம்லியில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த முனீஸ்வரர் காளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானுக்கு எதிராக, இந்து சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று வேதமூர்த்தி காட்டமாகக் கூறியுள்ளார்.
சிறிய கோவில் என்றோ, பெரிய கோவில் என்றோ விளக்கம் அளிக்கும் தகுதி அட்னானுக்கு இல்லை என்றும், சமயம் தொடர்பான விவகாரங்கள் பற்றி அறிக்கை விடும் உரிமை அவருக்குக் கிடையாது என்றும் வேதமூர்த்தி சாடியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி ஆலயம் கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பாக அரசாங்கத்திற்கும், ஆலய நிர்வாகத்திற்கும் பிரச்சனைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் (DBKL ) அதிரடியாக ஆலயத்திற்கு வந்திறங்கி, ஆலயத்தின் ஒரு பகுதி இடித்துத் தள்ளினர்.
இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான்(படம்), ஆலயத்தின் வெளிப்புறத்திலுள்ள ஒரு பகுதி மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. இனி ஆலயம் அழகுபடுத்தப்பட்டு எழிமிக்க ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வேதமூர்த்தி கூட்டரசுப் பிரதேச அமைச்சர் என்ற முறையில் அவர் இந்துக்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்து டிபிகேஎல் அதிகாரிகளின் அநியாயமான செயலுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்று விமர்சித்துள்ளார்.