சென்னை, நவம்பர் 13- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி ஜெயலலிதா மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, “காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கடந்த மார்ச் 25ம் தேதி, அக்டோபர் 17ம் தேதிகளில் நான் தங்களுக்கு கடிதம் எழுதினேன். இதை தொடர்ந்து, கடந்த மாதம் 24ம் தேதி தீர்மானத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் வெளி விவகாரத்துறை அமைச்சர் தலைமையில் பிரதிநிதிகள் கொண்ட குழுவை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.
அக்டோபர் 24ம் தேதி கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த செயல்பாடு தமிழர்களுக்கு அநீதியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதன் அடிப்படையில் நவம்பர் 12ம் தேதி இந்த உணர்வு பூர்வமான பிரச்னையை சட்டப் பேரவையில் தீர்மானமாக கொண்டு வந்துள்ளோம். இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியாவில் இருந்து ஒருவரும் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த கடிதத்துடன் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மான நகலையும் இணைத்துள்ளேன்” என ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.