ஸ்ரீஹரிகோட்டா, நவம்பர் 13- மங்கல்யான் விண்கலம் புவி வட்டப்பாதையில் நேற்று 1 லட்சத்து 18 ஆயிரத்து 642 கி.மீ உயரத்தை எட்டியது. விஞ்ஞானிகள் நேற்று அதிகாலை மேற்கொண்ட முயற்சிக்கு முழு பலன் கிடைத்தது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக 450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி&25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட மங்கல்யான் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மங்கல்யானின் பயண வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகளை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் கடந்த 7ம் தேதி தொடங்கியது. விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நியூட்டன் திரவ இன்ஜினை இயக்கி, விண்கலத்தை புவி சுற்றுவட்ட பாதையிலிருந்து ஒரு லட்சம் கி.மீ தூரம் உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த 5 நாட்களாக விண்கலத்தை உயர்த்தும் பணி படிப்படியாக நடந்தது. நேற்று முன்தினம் விண்கலத்தை 71 ஆயிரத்து 623 கி.மீ உயரத்திலிருந்து மேலே உயர்த்தும் பணி தொடங்கியது. விண்கலம் 78 ஆயிரத்து 276 கி.மீ உயரத்தை அடைந்தபோது இன்ஜின் நின்று விட்டது.
அதில் உள்ள இரண்டு காயில்களையும் ஒரே நேரத்தில் இயக்கியதால் இந்த பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மந்த நிலை காரணமாக நேற்று முன்தினம் எதிர்பார்த்த உயரத்தை விண்கலம் அடையவில்லை. இதையடுத்து 5வது முயற்சியாக விண்கலத்தை உயர்த்தும் பணி நேற்று காலை 5.03 மணிக்கு மீண்டும் தொடங்கியது. நியூட்டன் திரவ இயந்திரம் மீண்டும் இயக்கப்பட்டு விண்கலம் நெடிக்கு 124.9 மீட்டர் வேகத்தில் உயர்த்தப்பட்டது.
மொத்தம் 303.8 விநாடிகளில் விண்கலம் 78 ஆயிரத்து 276 கி.மீ தூரத்திலிருந்து 1 லட்சத்து 18 ஆயிரத்து 642 கி.மீ தூரம் உயர்த்தப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. மொத்தம் 7 நிமிடங்களில் இப்பணி முடிவடைந்து விட்டது. இது குறித்து பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், ‘‘விண்கலத்தை உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிந்து விட்டது. புவி சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலக விண்கலம் தயாராகிவிட்டது’’ என்றார்.
மங்கல்யான் விண்கல திட்டத்தை பொறுத்தவரை இரண்டாம் கட்ட பணி நேற்று வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது.இதையடுத்து 3வது கட்டமாக மேற்கொள்ளப்படும் மிகவும் சிக்கலான பணி டிசம்பர் 1ம் தேதி 12.42 மணிக்கு தொடங்குகிறது. புவிசுற்று வட்டப் பாதையிலிருந்து விண்கலத்தை விலக்கி, செவ்வாய் கிரக சுற்றுவட்டபாதையை நோக்கி நகர்த்துவதுதான் இந்தப் பணி. இது வெற்றிகரமாக நடந்து விட்டால் 300 நாளில் மேற்கொள்ள வேண்டிய 40 கோடி கி.மீ பயணத்தை மங்கல்யான் தொடங்கும்.