டாக்கா, நவம்பர் 28- வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காபந்து ஆட்சி நடந்து வருகிறது. இந்த காபந்து அரசு அமைத்தது தொடர்பாக பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக அவரது பரம எதிரியான பி.என்.பி. கட்சியின் தலைவர் கலிதா ஜியா போராட்டம் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், ஜனவரி 5-ம் தேதி பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்று நேற்றுமுன் தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என கலிதா ஜியா வலியுறுத்தினார். இதை காபந்து அரசு நிராகரித்தது.
இதையடுத்து கலிதா ஜியா இரண்டு நாள் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து போராட்டம் நடத்தி வருகிறார். இப்போராட்டத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
நேற்று நடந்த போராட்டத்தின்போது, கலவரக்காரர்கள் ரெயில் பாதையை உடைத்தும், சாலைகளில் சென்ற பேருந்து மற்றும் கார்களுக்கு தீவைத்தும் அராஜாகத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில், பேருந்து மற்றும் கடல் போக்குவரத்துகளில் தடை ஏற்பட்டது.
இதில் அவாமி லீக் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி காவல் துறையினருடன் மோதல் நடந்தது. அவாமி லீக் கட்சியை சேர்ந்த இருவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வன்முறை சம்பவங்களில் நேற்று மட்டும் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய போராட்டத்திலும் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. ஆங்காங்கே போலீசார் மற்றும் ஆளும் கட்சியினருடன் எதிர்க்கட்சியை சேர்ந்த கலவரக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் மேலும் 12 மணி நேர போராட்டத்திற்கு கலிதா ஜியா அழைப்பு விடுத்துள்ளார். இதனால் போராட்டம் தீவிரமடைந்து, பிரச்சினையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை கைவிட்டுவிட்டு, காபந்து அரசில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் ஹசினா கேட்டுக்கொண்டுள்ளார்.