கோலாலம்பூர், டிச 9 – வல்லினம் இலக்கிய இதழில் வெளிவந்த “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற சிறுகதையால் நாடெங்கிலும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக, அக்கதையை எழுதிய மின்னல் எப்.எம் அறிவிப்பாளர் தயாஜி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவ்வானொலி நிறுவனத்தின் தலைவர் எஸ்.குமரன் தெரிவித்தார்.
இது குறித்து பத்திரிக்கைகளுக்கு குமரன் வெளியிட்டுள்ள செய்தியில், “தயாஜி ஒப்பந்த அடிப்படையில் சில நிகழ்ச்சிகளைப் படைப்பார். அவர் எழுதிய சிறுகதை சர்ச்சைக்கு உள்ளாகி, இந்து சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக பல புகார்கள் வருவதால், அதன் அடிப்படையில் அவரை தற்காலிக வேலை நிறுத்தம் செய்துள்ளோம்” என்று குமரன் கூறினார்.
மேலும், அரசாங்க வானொலியான மின்னல் எப்.எம் மிற்கு தயாஜியால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக அவரை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளதாகவும் குமரன் தெரிவித்தார்.
இதனிடையே, இக்கதையை வல்லினம் இதழில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், கதை குறித்து கேள்வி கேட்பவர்களையெல்லாம் அபத்தமான சொற்களால் விமர்சித்து வரும் வல்லினம் இணைய இதழின் ஆசிரியர் ம.நவீன் மீதும் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக இருக்கும் நவீனின், இது போன்று அடாவடியாக அனுகுமுறையைக் கண்டு பலரும் வெறுப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிறுகதை குறித்து கேள்வி கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றும், அதற்கு முழு பொறுப்பான இதழின் பொறுப்பாசிரியரும், எழுத்தாளரும் விளக்கமளிக்க வேண்டும். அதைவிடுத்து கேள்வி கேட்பவர்களை மடையர்கள் என்றும், பன்றிகள் என்றும் அநாகரிகமாக விமர்சிக்கக் கூடாது என்றும் பேஸ்புக் பயனர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அத்துடன், இவ்விவகாரம் இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்ததற்குக் காரணம், வல்லினம் ஆசிரியவர் நவீனின் ஆணவமான பதில்கள் தான் என்றும், சிறுகதையிலும் சரி, பேச்சிலும் சரி நாசூக்கான சொல்முறையும், வடிவமைதியும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மூத்த எழுத்தாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வல்லினம் இணையத்தளத்தை யாரோ ஹேக் (Hack) செய்துவிட்டதாக நவீன் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அந்த இணையத்தளத்தை அமைச்சு தடை செய்து அதன் உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
எனினும், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் பத்திரிக்கைகளுக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.