பாங்காக், டிசம்பர் 9- தாய்லாந்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் டி-டே என்று நடத்தப்பட உள்ள பேரணியில் பங்குகொண்டு அரசை எதிர்ப்பதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக முடிவு செய்திருப்பது குறித்து தாய்லாந்தில் பிரச்சினையை மேலும் அதிகரித்துள்ளது.
எனவே, பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு 60 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்த பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பரிந்துரை செய்துள்ளார். இந்த முடிவினைத்தான் எதிர்க்கட்சியினர் விரும்புகின்றனர் என்றால் தான் அதனைச் செய்வதாக அவர் சிறப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று தெரிவித்தார்.
தனது பரிந்துரையை எதிர்க்கட்சியாளர்கள் நிராகரித்தால் நெருக்கடி தொடரும் என்று அவர் எச்சரித்தார். பொதுமக்கள் நாம் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்யும்வகையில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இங்க்லக்கின் திட்டத்தால் கவரப்படாத, எதிர்க்கட்சிப் பேரணி ஒன்றின் தலைவரான சதித் வோங்நோங்டோயி எதிர்க்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்குகொள்ளப் போவதாக நேற்று பொதுமக்களிடம் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்ற மாதம் போராட்டம் ஆரம்பித்தபோதே ஒன்பது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இன்று நடக்க இருக்கும் போராட்டம் பிரதமரைப் பதவியிறக்கம் செய்ய கடைசி அடியாக இருக்கும் என்று சுதீப் தாக்சுபன் பொதுமக்களை பேரணியில் பங்கு கொள்ளும்படி அழைத்துள்ளார். ஏற்கனவே இவர் மீது கைது ஆணை உள்ளது. இந்தப் போராட்டத்தில் பிரதமரைப் பதவியிறக்கம் செய்யமுடியவில்லை எனில் தானே காவல்துறையிடம் சரணடைவதாக அவர் கூறியுள்ளார்.
அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பெருமளவில் செய்ய அரசு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.