புதுடெல்லி, டிசம்பர் 10 – 5 மாநில சட்டசபை தேர்தலில் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.
4 மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் சோனியா கவலையும் விரக்தியும் அடைந்தார். இதனையொட்டி நேற்று அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தவிர மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, சுசில் குமார் ஷிண்டே உள்பட பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பணவீக்கத்தால் ஏற்பட்ட விலைவாசி உயர்வே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று கூறினார்கள். அதை சோனியா ஏற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்த 4 மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தோல்விக்கான காரணத்தை அறிக்கையாக தயாரித்து சோனியாவிடம் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட சோனியா 4 மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை நீக்க சோனியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் புதிய நிர்வாகிகளை சோனியா தேர்வு செய்தார் என்று தெரிகிறது.