லண்டன், டிசம்பர் 18 – ‘இங்கிலாந்து இளவரசி டயானா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை’ என, பிரிட்டன் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மனைவி டயானா, 36. இவர் 1997ம் ஆண்டு கார் விபத்தில் பலியானார். அந்த விபத்தில் டயானாவின் ஆண் நண்பரான டோடி பயத், கார் ஒட்டுநர் ஆகியோரும் இறந்தனர். டயானாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் , அவர் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின.
இதில், பிரிட்டன் ராணுவ அதிகாரி ஒருவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, பிரிட்டன் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். பல கட்ட விசாரணைக்குப் பின், டயானாவின் மரணம் குறித்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் நேற்று தொரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பிரிட்டன் காவல்துறையினர் கூறியதாவது, “ டயானாவின் மரணம் குறித்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. அவர், கொலை செய்யப்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. அவர், கார் விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விசாரணை அறிக்கை, விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளனர்.