கோலாலம்பூர், டிச 19 – மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மசீச கட்சித் தேர்தல் மற்றும் 48 ஆவது இளைஞர் ஆண்டுக்கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் துவங்கியது. இளைஞர் பகுதியின் 34 பதவிகளுக்கு 69 பேர் போட்டியிடுகின்றனர்.
இளைஞர் பகுதியின் தேசியத் தலைவர் பதவிக்கு, மசீச கல்விப் பிரிவின் தலைவர் சோங் சின் வூங்கிற்கும், பத்து தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ கோ கைக் மெங்கிற்கும் இடையே நேரடிப் போட்டி நடைபெறுகிறது.
அதே போல், மசீச மகளிர் பிரிவுக்கு நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்பிரிவில் 31 பதவிகளுக்கு 43 பேர் போட்டியிடுகின்றனர்.
மகளிர் பிரிவின் தேசியத் தலைவர் பதவிக்கு மசீச உதவித்தலைவர் டத்தோ ஹெங் சை கி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பினாங்கு தேசிய முன்னணியின் தகவல் தொடர்புத் தலைவர் டான் செங் லியாங் போட்டியிடுகிறார்.
இளைஞர் மற்றும் மகளிர் பிரிவின் நடப்பு தலைவர்களான டத்தோ வீ கா சியாங் மற்றும் மகளிர் தலைவி டத்தோ யூ சோக் டவு ஆகியோர் தங்கள் பதவிகளை தற்காத்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளதால், அந்தப் பதவிகளுக்கு தற்போது புதியவர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, கடந்த திங்கட்கிழமை மகளிர் பிரிவின் துணைத்தலைவி பதவிக்கான வேட்புமனுத் தாக்கலில் டத்தோ லீ பிட் செர்ன் – ஐத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு பெற்றார்.
இது தவிர, வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தலைமைத்துவ பதவிகளுக்கான தேர்தலில், தேசியத் தலைவர் பதவிக்கு 3 பேரும், துணைத்தலைவர் பதவிக்கு 2 பேரும், 4 உதவித்தலைவர் பதவிகளுக்கு 9 பேரும், 25 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு 58 பேரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.