புதுடெல்லி, டிசம்பர் 19- அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானியை கெளரவப்படுத்துவதற்காக அவரை ஐ.நா. நிரந்தர பணிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அவருக்கு அமெரிக்க அரசின் முழுப் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை (39), விசா விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் அமெரிக்க போலீசார் கைது செய்து மிகவும் மோசமாக நடத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தையொட்டி, இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இப்பிரச்னை நேற்று நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிரொலித்தது.அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த சீதாராம் யெச்சூரி,இச்சம்பவத்தை சுயமரியாதை உள்ள எந்த நாடாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவின் செயல் அவர்களின் போலித்தனத்தை காட்டுகிறது. இச்சம்பவம் மட்டும் அல்லாமல், முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய மத்திய அமைச்சர்கள் உட்பட சிறப்பு அந்தஸ்து பெற்ற பல இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் பிரச்னையை சந்தித்துள்ளனர் என்றார்.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சரான குர்ஷித்,இந்திய தூதரக அதிகாரியை சதி செய்து கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் வேலை செய்த இந்தியப் பெண் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்து இந்தியா அனுப்பும்படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வேலைக்காரப் பெண் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்காமல், தூதரக அதிகாரியை கைது செய்துள்ளது. அமெரிக்காவின் செயல் நியாயமற்றது. இந்த விஷயத்தில் துணை தூதரின் கெளரவம் காக்கப்படும். நியூயார்க்கில் கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரியை திரும்ப அழைத்து வருவோம். அது என் பொறுப்பு. இதை செய்ய நான் தவறினால், மாநிலங்களவைக்கு நான் வரமாட்டேன் என்று சபதம் எடுத்துக் கொண்டார்.