கோலாலம்பூர், டிச 19 – நெடுஞ்சாலை டோல் கட்டண உயர்வு திட்டத்திற்கு எதிராக தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களே அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துத்தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, தேசிய முன்னணி தனது தேர்தல் அறிக்கையில் டோல் கட்டணத்தை குறைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து தேசிய முன்னணியின் பேக்பென்சர்ஸ் சங்கம் (BN Backbenchers Club) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லா டோல் கட்டணங்களும் ஒவ்வொரு நிலையாகக் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் டோல் கட்டணம் உயராது என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று அதன் தலைவர் ஷாரிர் சமட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்துடன் தாங்கள் கலந்துரையாடி வருவதாகவும், டோல் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றால் அரசாங்கம் அந்த நிதியை வேறுவழியில் தான் சரிக்கட்ட இயலும் என்பதை தாங்கள் அறிந்திருப்பதாகவும் அச்சங்கத்தின் தலைவர் ஷாரிர் குறிப்பிட்டுள்ளார்.
நெடுஞ்சாலை டோல் கட்டண உயர்வு திட்டத்தை எதிர்த்து தேசிய முன்னணியின் கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரீஸல் மெரிக்கன் நைனா மெரிக்கன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பொதுத்தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில், உள் நகரங்களின் டோல் கட்டணங்களை குறைப்பதாக தேசிய முன்னணி கொடுத்த தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.