கோலாலம்பூர், டிச 23 – கடந்த மே 5 பொதுத்தேர்தலுக்குப் பிறகு தொடங்கிய பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தேனிலவு ஆட்சியை, ‘த ஹீட்’ வார இதழ் முடிவிற்குக் கொண்டு வந்தது என்றும், அதன் காரணமாக தற்போது நாட்டில் மகாதீரின் ஆட்சி முறைகள் திரும்ப வந்துள்ளன என்றும் பாஸ் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சுஹைஸன் கையாட்(படம்) தெரிவித்துள்ளார்.
‘த ஹீட்’ வார இதழை முடக்கியதன் மூலம் உள்துறை அமைச்சு, பிரதமர் பற்றி விமர்சிப்பதை நிறுத்துங்கள் என்று மற்ற பத்திரிக்கைகளுக்கு சொல்லாமல் சொல்கிறது என்று சுஹைஸன் இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உள்துறை அமைச்சின் பத்திரிக்கைகளுக்கு எதிரான இத்தகைய கடும் நடவடிக்கை நியாயமற்றது என்று கூறிய சுஹைஸன், உடனடியாக த ஹீட்டுக்கு எதிரான தனது ஆணையை திரும்பப்பெறும் படியும் அமைச்சரவையை வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற விமர்சனங்களையும், அறிவுரைகளையும் நாட்டின் பிரதமர் என்ற முறையில் நஜிப் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும், அதன் மூலம் அரசாங்கத்தின் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும் என்றும் சுஹைஸன் தெரிவித்தார்.
மேலும், ஒருவேளை தன்னைப் பற்றியும், தனது மனைவி பற்றியும் அந்த வார இதழ் தவறான கட்டுரை வெளியிட்டிருப்பதாக பிரதமர் எண்ணினால், அதன் மேல் நியாயமான முறையில் அவதூறு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் சுஹைஸன் கூறியுள்ளார்.
கடந்த மாதம் பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதற்காக ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் கடந்த வாரம் காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது.
எனினும், உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர், பத்திரிக்கை விதிகளை மீறியதால் தான் அவ்வார இதழ் முடக்கப்பட்டதாக ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ வெளியிட்டிருந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.