சென்னை, டிசம்பர் 23- திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களுக்கு விளக்கிக் கூறும் பொதுக் கூட்டம் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் தாதகாப்பட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “ஏற்காடு இடைத்தேர்தலில் மனசாட்சிப்படி திமுகவே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தங்களுக்கு தேவைப்படும்போது மட்டும் திமுகவை பயன்படுத்தியது. அந்த கட்சியினரால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம், அதனால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம், இதை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்” என்று கூறினார்.
அவர் மேலும் தமதுரையில், “தமிழகத்தில் உள்ள பிரச்னைகளுக்கே தீர்வு காண முடியாத முதல்வர், தான் தான் அடுத்த பிரதமர் என கூறிக் கொண்டிருக்கிறார். உண்மையிலேயே தமிழர்களின் மீது அவருக்கு அக்கறை இருந்திருந்தால் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டிருக்க மாட்டார். கருணாநிதி தான் தமிழர்களின் தலைவர் ஆவார், அட்டப்பாடி தமிழர்கள் பிரச்சனை முதல் ஈழம், சிங்கப்பூர் தமிழர்கள் பிரச்சனை வரை அனைத்திற்கும் முதலில் குரல் கொடுத்தவர் அவர் தான்.
கருணாநிதியை தேடி பிரதமர் ஆகும் வாய்ப்பு பல முறை வந்தது. ஆனால் அவர் தமிழர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்தே அந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்தார். ஆனால் தமிழகத்தை விட்டால் வேறு எங்கும் செல்வாக்கே இல்லாத ஜெயலலிதாவோ எப்படியாவது பிரதமர் ஆகிவிட வேண்டும் என்று கனவு காண்கிறார். அவரது பிரதமர் கனவின் நோக்கமே பெங்களூர் வழக்கை முடிப்பது” என்று குஷ்பு அக்கூட்டத்தில் பேசினார்.
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்றுகிறேன் என்று தெரிவித்த ஜெயலலிதா, அந்த தீர்மானத்தில் இடப்பட்ட பேனா மை காய்வதற்குள் தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி தனது இரட்டை வேடத்தை காட்டினார் என்றும் படு ஆவேசமாக அக்கூட்டத்தில் குஷ்பு பேசியுள்ளார்.