வாஷிங்டன், டிசம்பர் 23 – அமெரிக்காவில் தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஓபாமா 2–வது முறையாக அதிபர் பதவி வகிக்கிறார். அவரது பதிவக்காலம் வருகிற 2016–ம் ஆண்டில் முடிகிறது.
அதை தொடர்ந்து நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளராக பாபி ஜிண்டால் போட்டியிடுவார் என தெரிகிறது.
இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். தற்போது லூசியானா மாகாண கவர்னர் ஆக உள்ளார். இப்பதவியை 2–வது முறையாக தொடர்ந்து வகிக்கிறார். இனி அமெரிக்க சட்டப்படி 2 தடவைக்கு மேல் இனி அவர் கவர்னர் பதவிக்கு போட்டியிட முடியாது.
எனவே, அடுத்த கட்டமாக இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் டேவிட் விட்டர் தெரிவித்துள்ளார். பாபி ஜிண்டாலை எனக்கு பிடிக்கும். அவர் மதிக்கத்தக்க ஒரு தலைவர். அவர் அதிபர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.
பாபிஜிண்டாலின் கவர்னர் பதவி காலம் வருகிற 2015–ம் ஆண்டில் முடிகிறது. அவரை தொடர்ந்து இப்பதவிக்கு டேவிட் விட்டர் போட்டியிடுவார் என தெரிகிறது.