கோலாலம்பூர், டிச 30 – விலையேற்றத்தை மையமாக வைத்து அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் நாளை டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணிக்கு எந்த ஒரு கருணையோ அல்லது சமரசமோ காட்ட மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கூறியுள்ளார்.
டத்தாரான் மெர்டேகாவில் நாளை நடக்கவுள்ள இந்த பேரணியில் மக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த பேரணி எதிர்கட்சியினரின் ‘சூழ்ச்சி அரசியல் கலாச்சாரம்’ என்றும் சாஹிட் விமர்சித்துள்ளார்.
இது போன்ற எதிர்மறையான அரசியல் கலாச்சாரத்தை தவிர்த்து பேரணியை உடனடியாக நிறுத்துமாறும், எதிர்கட்சியினர் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் சாஹிட் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே பாஸ் உலாமா தலைவர் ஹாரும் தாயிப் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தில், “இந்த புதுவருட பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு அல்ல. அரசாங்கம் தான் அப்படி கூறிக்கொள்கிறது. இந்த பேரணியில் எந்த ஒரு கலகமும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஒருவேளை அரசாங்கம் அடாவடித்தனமாக ஏதாவது செய்தால் கலகம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது ” என்று தெரிவித்துள்ளார்.