Home இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் பரபரப்பான பேட்டி

பிரதமர் மன்மோகன் சிங் பரபரப்பான பேட்டி

519
0
SHARE
Ad

manmohan singh

புதுடெல்லி, ஜன 4- மத்தியில் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சி தான் அமையும். இதில் சந்தேகம் இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தகுந்த நேரத்தில் அறிவிக்கும்.  பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் ராகுல் காந்தி என்று பிரதமர் கூறியுள்ளார். கடந்த மூன்றாண்டில் முதன் முறையாக விரிவான முறையில் பிரதமர் மன்மோகன் சிங் , பத்திரிகையாளர்களுடன் நேற்று பேசினார்.

நேற்று காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங், பத்திரிகையாளர்களை சந்திக்கப்போகிறார் என்றவுடன் எல்லா பத்திரிக்கை அலுவலகங்களிலும் பரபரப்பு. தொலைக்காட்சி ஊடகங்கள் சுறுசுறுப்பாகி விட்டன. டெல்லியில் தேசிய ஊடக அரங்கில் 250 பத்திரிகையாளர்கள்  குவிந்து விட்டனர். கேள்வி கேட்க விரும்புவோரிடம் இருந்து பெயர் விவரம் சேகரிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேடையேறினார். கைகூப்பியபடி அமர்ந்த பிரதமர், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தன் முகப்பு உரையை முடித்தார். என்னவெல்லாம் சொல்லப்போகிறார் என்று பரபரத்த பத்திரிகையாளர்கள் சிலர் கையில் கையேடு, பேனாவுடனும், சிலர் பதிவு செய்யும் சாதனமுடனும், சிலர் திறன்பேசி ஆடியோ பதிவுக்கு தயாராகியும் இருந்தனர்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியும், அவரின் பொறுமையான, அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத பதில்களும் பின்வருமாறு:

1. பிரதமர் வேட்பாளரை பாஜ அறிவித்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி எப்போது அறிவிக்கும்?

எங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம்.

2. மூன்றாவது ஐமு கூட்டணி ஆட்சியில் நீங்கள் பிரதமராக தொடர்வீர்களா?

என்னை பொறுத்தவரை அதை மறுக்கிறேன். நான் என் பதவிக்காலத்தை  முடித்து கொள்ளவே விரும்புகிறேன். தேர்தல் முடிந்த பின் நான் ஓய்வு பெற விரும்புகிறேன்.

3. ஐமு கூட்டணி ஆட்சியின் (2004 – 09) முதல் ஐந்தாண்டு ஆட்சியில் அரசு மீது பல  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இரண்டாவது முறை (2009 – 14)ஆட்சியிலும் ஊழல் புகார் கூறப்பட்டன. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

முதல் முறை  ஆட்சியின் போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை 2009 லோக்சபா தேர்தலின் போது மக்கள் புறந்தள்ளி விட்டனர். அவர்கள் அந்த குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. எப்போது மக்கள் தங்கள் நம்பிக்கையை ஐமு கூட்டணி மீது தந்தார்களோ, இரண்டாவது முறை  ஆட்சியில் அதே குற்றச்சாட்டுகளை கூறுவது நியாயமில்லை. இரண்டாவது முறை  ஆட்சியின் போது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள்  அல்ல இவை  என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

4. நிலக்கரி , 2 ஜி ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் உங்கள் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டதே?

2ஜி விஷயத்தில் வெளிப்படையான ஒதுக்கீடு வேண்டும் என்று நான் சொன்னேன். அதுபோல, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாகவும் நான் சொன்னேன்; வெளிப்படையான ஏலம் இருக்க வேண்டும் என்று.  இப்படி நான் சொன்னதை  எல்லாம் வசதியாக எதிர்கட்சிகள் மறந்து விட்டனர். வரலாறு எழுதப்படும் போது நாங்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருந்தோம் என்பது தெரியவரும். அதற்காக நான் முறைகேடுகள் நடக்கவே இல்லை என் ஆட்சியில் என்று சொல்லவில்லை. அவ்வப்போது சரி செய்யப்பட்டும் வந்துள்ளன.

5. உங்கள் பத்தாண்டு பதவிக் காலத்தில், அந்த பொறுப்பை சிறப்பாக செய்ததாக திருப்தியுடன் தான் இருக்கிறீர்களா?

இதில் எந்த சந்தேகமோ, அதிருப்தியோ எனக்கு  ஏற்பட்டதே இல்லை. இந்த நாட்டுக்கு பிரதமர் என்ற வகையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். செய்து வருகிறேன் என்று தான் பெருமை கொள்கிறேன். நானோ, என் உறவினர்களோ, நண்பர்களோ இந்த பதவி மூலம் எந்த பலனும்  அடைந்ததில்லை. அதற்கு நான்  என் பதவியை பயன்படுத்தியதும் இல்லை என்பதை அறுதியிட்டு சொல்வேன்.

6. அமெரிக்காவுடன் இந்தியாவின் நட்பு சற்று தளர்ந்ததாக சமீப காலமாக தெரிகிறதே?

மத்திய அரசை பொறுத்தவரை, இரு நாடுகளுக்கு இடையே உறவை பலப்படுத்த வேண்டும்.  அதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது  என்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. சிறிய அளவில் உரசல்கள் இருக்கலாம். இதெல்லாம் தற்காலிகமானது தான். இரு நாட்டு நல்லெண்ண அடிப்படையில் தூதரக மட்டத்தில் பேச்சுக்கு இடம் கிடைக்கும் போது எல்லாம் சரியாகி விடும்.

7. வடகிழக்கு மாநிலங்களில் எல்லையில் முள்வேலி பணி பாதிக்கப்பட்டுள்ளதே?

சமதளமாக இல்லாத நிலையில் எல்லையில் முள்வேலி அமைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான்.

8. இந்தியாவுக்கு நாடாளுமன்ற ஜனநாயக முறை சரி தானா? ஜனாதிபதி ஆட்சி முறை சரியாக இருக்குமா?

என் கருத்து என்னவென்றால், இந்தியாவுக்கு சிறந்த முறை நாடாளுமன்ற ஜனநாயக முறை தான். ஜனாதிபதி ஆட்சி முறை என்பது எதிர்விளைவுகளை தான் தரும். எதிர்பார்த்த பலன்களை தராது.

9. தேவயானி விஷயத்தில் காட்டிய அக்கறையை இலங்கை தமிழர் விஷயத்திலோ, மீனவர் விஷயத்திலோ காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறதே?

இலங்கை தமிழர் விஷயத்தில்  எதுவும் செய்யவில்லை என்று கூற  முடியாது. அவ்வப்போது இலங்கையுடன் பேசி நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளோம். மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக தீர்வு காண இரு நாட்டு மீனவர்களும் அமர்ந்து தான் பேச  வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது.

10. உங்கள் பதவிக்காலத்தில் சிறந்த தருணம் என்று எதை நினைக்கிறீர்கள்?

அமெரிக்காவுடன் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தான்.

11. ஊழலை  ஒழிக்க நடவடிக்கை எடுத்து விட்டதாக நினைக்கிறீர்களா?

ஊழலை ஒழிப்பது  என்பது ஒரு கட்சி சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இதற்கு தொடர் நடவடிக்கை வேண்டும்.

12. உங்கள் அரசு செய்த சில விஷயங்களுக்கு ராகுல் காந்தியோ, சோனியாவோ எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது பற்றி…

சில சமயங்களில் அப்படி நேர்ந்ததுண்டு. அது நல்லதற்கு தான். தவறு என்று தெரிந்தபோது அதை திருத்தியுள்ளது அரசு. இந்த வகையில் இப்படி கருத்து சொல்வது எனக்கு பயனுள்ளதாகவே அமைந்து வந்திருக்கிறது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

13. பிரதமர் – காங்கிரஸ் தலைவர் என்று முடிவெடுப்பதில் இரு  உயர்மட்ட மையங்கள் இருப்பது நல்லதா? உங்களுக்கு பிரச்னையாக இருந்ததில்லையா?

எனது பத்தாண்டு பதவிக்காலத்தில்  எனக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் எந்த பிரச்னையும் வந்ததே இல்லை. பல முறை  எண்ணி  பார்த்திருக்கிறேன், சூழ்நிலைகள் அப்படி இடம் கொடுக்கவில்லை என்பது திருப்தியான விஷயம்.

14. ஆம்  ஆத்மி கட்சி வெற்றி பற்றி உங்கள் கருத்து?

ஜனநாயக முறையில் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். எனினும், அவர்கள் எதிர்வரும் காலத்தில் சவால்களை எதிர்கொள்வது, சூழ்நிலைகளை சமாளிப்பது போன்ற இக்கட்டான நிலையில் நடவடிக்கை எடுப்பதை பொறுத்து தான் அவர்கள் திறமை, சாதுர்யம் கணக்கிட முடியும். காலம் தான் அதற்கு பதில் சொல்லும்.

15. உங்கள் மீது  ஊடங்கள் , எதிர்கட்சிகள் எழுப்பும் விமர்சனங்கள் குறித்து…

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அல்லது இப்போதுள்ள ஊடங்களை விட, வரலாறு  என் மீது இரக்கம் காட்டும் என்று முழுமையாக நம்புகிறேன். கூட்டணி  ஆட்சியில் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, என்னால் முடிந்தவரை பிரதமர்  என்ற வகையில் என்ன செய்ய முடியுமோ அவற்றை நூறு சதவீதம் செய்ய  முயற்சித்துள்ளேன். செய்தும் உள்ளேன்.

16. அடுத்த பிரதமர் ஐமு கூட்டணியில் இருந்து  அல்ல; மோடி தான் பிரதமராக வருவார் என்று கணிப்பு கூறுகிறதே?

அடுத்த பிரதமரும் ஐமு கூட்டணியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. மோடி , பிரதமராக வருவாரானால் அது நாட்டிற்கு அழிவு காலம் துவங்கி விட்டது  என்று தான் பொருள்.

17. பலமான பிரதமர் வேண்டும் என்ற கருத்து வலுவாக நிலவுகிறதே?

பலமான பிரதமர் என்றால், அகமதாபாத் தெருக்களில் அப்பாவி மக்களை ஓடஓட விரட்டி கொத்துகொத்தாக கொன்று குவித்த பாதக செயலுக்கு தலைமை ஏற்றவர் தான் பலமானவராக இருக்க முடியும் என்று நீங்கள் நினைப்பீர்களானால், அப்படிப்பட்ட ஒருவர் பிரதமராக வரத்தேவை இல்லை என்பது தான்  என் கருத்து.

18. இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னையை தீர்க்க உங்கள் பதவிக்காலத்தில் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லையே என்று எண்ணியதுண்டா?

என்னால் முடிந்தவரை அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்க்க முழு   நடவடிக்கைகளை எடுத்தேன். துணை கண்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டால், இரு நாட்டு உறவு மிக முக்கியம் என்று உணர்வர் யாரும் இல்லை.

19. ராகுல் , பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நீங்கள் ஆதரிப்பீர்களா?

பிரதமர் வேட்பாளராக ராகுல் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படுவார். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நான் முழுமையாக வரவேற்பேன்.

20. உங்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறியபோது, எப்போதாவது பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போய்விடலாமே என்று நினைத்ததுண்டா? அப்படி வேதனை பட்டதுண்டா?

எந்த ஒரு கட்டத்திலும் நான்  அப்படி நினைக்கவே இல்லை. என்னை பொறுத்தவரை, இரண்டு முறை ஆட்சியின் போதும் எனக்கு எந்த வேதனையும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை வரவில்லை. என் பணியில் தீவிரத்தன்மை காட்டினேன். யாருக்கும் சாதகமாகவோ, யாருக்கும் பயந்தோ நான் பதவியில் நீடிக்கவில்லை.

21. ஐமு கூட்டணி மூன்றாவது முறை உருவாகும் என்று நினைக்கிறீர்களா?

மூன்றாவது ஐமு கூட்டணி  உருவாக வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அப்படி ஒரு கூட்டணி இப்போதும் தேவை  என்பதையே அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், இப்போதைக்கு கூட்டணி பற்றி  எதுவும் கணிக்க முடியாது.

22. சமீபத்தில் சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுக்கு தோல்வி  கிடைத்தது. விலைவாசி தான் இதற்கு காரணம் என்று கூறப்படுவதை  ஒப்புக்கொள்கிறீர்களா? லோக்சபா தேர்தலில் இது எதிரொலிக்கும் என்று எண்ணுகிறீர்களா?

அடுத்த சில மாதங்களில் என்ன நடக்கும் என்பதை கணிக்க  முடியாது. விலைவாசி ஏற்றத்தை பொறுத்தவரை   எங்களின் கட்டுப்பாட்டை மீறிய விஷயம். சர்வதேச நிலவரப்படி விலைவாசி ஏறியிருக்கிறது.  அதை கட்டுப்படுத்த எங்களால் முடிந்தவரை நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.  ஆனால், மக்களிடம் தவறாக அது பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.

23. சிறுபான்மை மக்களுக்கு அரசு பெரிய அளவில்  எதுவும் செய்யவில்லையே?

சச்சார் குழுவில்  அறிக்கையில் தெரிவித்தபடி நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கும் அதிகமாகவே செய்துள்ளோம்.  ஆனால், மக்களிடம் சரியான முறையில் அது போய்ச் சேரவில்லை என்பதே உண்மை.  சில விஷயங்கள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.  அதனால் அமல்படுத்த  முடியவில்லை.

24. பொருளாதார சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்திய அரசு புதிதாக ஏதாவது அறிவிக்க உள்ளதா?

பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒன்று. அதை நாங்கள் அறிவிக்காமல் தான் செய்து வருகிறோம்.  அது தொடர்ந்து நடக்கும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்.

25. இமாச்சல் பிரதேச முதல்வர் வீர்பத்திர சிங் குறித்த குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

அது பற்றி  என்ன கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. முழு தகவல்கள் கிடைத்தால் தான் பதில் சொல்ல முடியும். பாஜ தலைவர் அருண் ஜெட்லி கடிதம் அனுப்பியுள்ளார். பத்திரிகை செய்திகள் வந்துள்ளன. அதில் நான் இன்னும் மனதை செலுத்தவில்லை.