புதுடெல்லி, ஜன 4 – டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 9 ஆண்டு கால செயல்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தார். அத்துடன் நிருபர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.
அப்போது, டெல்லியில் முதல் முறையாக தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து கேட்டபோது, “மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பு அளிக்க வேண்டும். நமது பொருளாதாரம் மற்றும் ஆட்சியமைப்பு முறை சந்தித்து வரும் சவால்களை கையாள்வதற்குரிய திறன் அவர்களுக்கு இருக்கிறதா? என்பதை காலம்தான் நிரூபிக்க வேண்டும்.
அவர்கள் பதவியேற்று ஒருவாரம் கூட ஆகவில்லை. இந்நிலையில், அவர்களைப்பற்றி மதிப்பீடு செய்வது சரியாக இருக்காது. அவர்களை நிரூபிக்க போதிய நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.” என்று பிரதமர் தெரிவித்தார்.
உலகளாவிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது. வரும் மாதங்களில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும், உற்பத்திப் பிரிவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.