டெல்லி, ஜன 4- பொது மக்களின் அன்றாட பிரச்சனைகள் பற்றி கவலைப்படாமல், நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி விவாதம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங் 3-வது முறையாக தாம் பிரதமராகும் எண்ணம் இல்லையென்று கூறினார். பிரதமர் பதவியேற்று நாட்டை வழிநடத்தும் தகுதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு உள்ளது என்று அவர் கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், நாட்டு மக்கள் நாள்தோறும் சந்திக்கும் இன்னல்களை தீர்க்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், அதைவிடுத்து அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.220-க்கு உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டிய கெஜ்ரிவால், ஏழை மக்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதனிடையே வரும் 17ம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது என்றார்.