Home வணிகம்/தொழில் நுட்பம் நிர்வாக மற்றும் மாற்றங்களுக்குத் தயாராகும் ‘பப்ளிக்’ வங்கி!

நிர்வாக மற்றும் மாற்றங்களுக்குத் தயாராகும் ‘பப்ளிக்’ வங்கி!

649
0
SHARE
Ad

public bankகோலாலம்பூர், ஜனவரி 9 – நமது நாட்டின் முக்கிய முன்னணி வங்கிகளுள் ஒன்றான ப ப்ளிக் வங்கி கூடிய விரைவில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகும் என்ற எதிர்பார்ப்பு வணிக வட்டாரங்களில் பெருகி வருகின்றது.

#TamilSchoolmychoice

மலேசியாவின் வணிகப் பத்திரிக்கைகள், பப்ளிக் வங்கியின் அண்மையக் கால நிலவரங்களையும், எதிர்காலத்தில் நடைபெறப் போகும் மாற்றங்கள் குறித்தும் ஆரூடங்களை வெளியிட்டு வருகின்றன.

இதற்கு முக்கியக் காரணம், அந்த வங்கியின் தோற்றுநரும், நிர்வாக வாரியத் தலைவருமான, 83 வயது, டான்ஸ்ரீ தே ஹோங் பியாவ் தற்போது நோய்வாய்ப்பட்டு இருப்பதுதான். அவரது பங்குகளை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து வங்கியின் நிர்வாகத்தில் இடம் பெற அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் முன்வராததும் மற்றொரு காரணமாகும்.

பப்ளிக் வங்கியின் தோற்றம்

1965ஆம் ஆண்டில் தற்போதைய நிர்வாகத் தலைவர் தே ஹோங் பியாவ்,  பப்ளிக் வங்கியைத் தோற்றுவித்தார். தற்போது பப்ளிக் வங்கியின் 24 சதவீத பங்குடமையை தே கொண்டுள்ளார்.

மலேசிய வங்கி சட்டங்களின்படி, ஒருவர் ஒரு வங்கியில் குறைந்த பட்சம் 10 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க முடியும். அதற்கும் கூடுதலாக வைத்திருப்பதற்கு பேங்க் நெகாரா என்ற மத்திய வங்கியின் சிறப்பு அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு சிறப்பு அனுமதி பெற்று 24 சதவீத பங்குடமையை பப்ளிக் வங்கியில் வைத்திருக்கும் தே, ஒரு சாதாரண வங்கி குமாஸ்தாவாக ஓசிபிசி வங்கியில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர், மலாயன் பேங்க், வங்கியின் நிர்வாகியாக தனது 34 வயதுக்குள் உயர்ந்தார்.

1966ஆம் ஆண்டில் பப்ளிக் வங்கியை அமைத்து, தனது கடும் உழைப்பால் இத்தனை ஆண்டுகளில் நாட்டின் முன்னணி வங்கியாக உயர்த்திக் காட்டினார். இன்றைக்கு நாட்டின் மிக விலையுயர்ந்த பங்கு மதிப்பைக்கொண்ட வங்கியாக இந்த வங்கி திகழ்கின்றது.

தே, பப்ளிக் வங்கியின் பெரும்பான்மை பங்குகளின் உரிமையாளர் என்ற  வகையில் தற்போது நாட்டின் ஐந்தாவது பெரும் பணக்காரராகத் திகழ்கின்றார் என்றும் கணிக்கப்படுகின்றது.

பப்ளிக் வங்கியை அடுத்து நடத்தப் போவது யார்?

மூன்று புதல்விகளையும், ஒரு புதல்வரையும் கொண்ட தேயின் குடும்ப உறுப்பினர்கள் நன்கு படித்தவர்களாக இருந்தாலும், யாரும் அவருக்குப் பின் பப்ளிக் வங்கியை நடத்த ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் தற்போது முதுமை காரணமாக தே நோய்வாய்ப்பட்டு இருப்பதால், இந்த பெரிய வங்கியை நிர்வாகம் செய்யவும் அதன் உரிமைப் பங்குகளை வாங்கவும் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் மற்றொரு முன்னணி வங்கியான ஹோங் லியோங் வங்கியும் பப்ளிக் வங்கியும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே வங்கியாகும் என்ற ஆரூடமும் கூறப்படுகின்றது.

இதற்கிடையில், சீன நாட்டு வணிகப் பிரமுக கோடீஸ்வரர்கள் சிலர் பப்ளிக் வங்கியில் பங்குகளை வாங்கி முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பப்ளிக் வங்கியின் தலைவர் தே தனது பங்குடமையை விற்றால் கோடிக்கணக்கான மதிப்புடைய அந்த பங்குகளை வாங்குவதற்கு பெரும் பணம் பலம் கொண்ட வணிகரோ, நிறுவனமோ முன்வர வேண்டும்.

இதனையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அடுத்து வரும் சில தினங்களில் அல்லது வாரங்களில், நிர்வாக ரீதியாகவும், பங்குடமை ரீதியாகவும் பப்ளிக் வங்கி பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்