நியூயார்க், ஜன 9 – விசா முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை தேதியை தள்ளி வைக்க கோரி தேவயானி கோப்ரகடே சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இந்திய துணைத் தூதரக அதிகாரியாக இருந்த தேவயானி கோப்ரகடேவை விசா முறைகேடு செய்ததாக கூறி அமெரிக்க காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பணிப்பெண்ணுக்கு குறைவான ஊதியம் வழங்கியதாக அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தால் இந்தியா-அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் வரை அமெரிக்காவுடனான நட்புறவு வழக்கம் போல இருக்காது என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேவயானி சார்பாக அவரின் வழக்கறிஞர் டேனியல், நியூயார்க் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவில் விசா முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை தேதியை தள்ளி வைக்குமாறு கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஒத்தி வைப்பது குற்ற ஆவணம் பதிவு செய்வதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டார்.