கோலாலம்பூர், ஜன 15 – துணை கல்வியமைச்சர் கமலநாதனை (படம்) தாக்கிய அம்னோ உறுப்பினருக்கு எதிராக உடனடியாக பிரதமர் நஜிப் துன் ரசாக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்பீல்ட்ஸில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பழனிவேல் இது குறித்து கூறுகையில், “இதற்கு முன் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ, துணை அமைச்சரோ, நாடாளுமன்ற செயலாளரோ தாக்கப்பட்டது கிடையாது. என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த பிரச்சனையின் அடிப்படை காரணம் பற்றி தெரிந்து கொள்வேன். இது குறித்து உலுசிலாங்கூர் பிரிவு விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்திற்கு தீர்வு காணாமல் விடமுடியாது” என்று தெரிவித்தார்.
இதனிடையே, உலுசிலாங்கூர் அம்னோ பிரிவிற்கு ம.இ.கா இளைஞர் பிரிவு மூன்று நாட்கள் கெடு விதித்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அம்னோ பிரிவு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு மன்னிப்பு கேட்காத பட்சத்தில் தேசிய அளவில் காவல்துறையில் புகார்கள் அளிக்கப்படும் என்று ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதே போல் ம.இ.கா மகளிர் அணித் தலைவி எம்.மோகனாவும், “பொது இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது கண்டிக்கத்தக்கது” என்று குரல் கொடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உலுசிலாங்கூரில் நடைபெற்ற கிளை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கமலநாதனுடன், அம்னோ கிளையைச் சேர்ந்த உயர் பதவியில் இருக்கும் ஒருவர், ஜோகூரில் பணியாற்றும் தனது மகனின் வேலை இடமாற்றம் குறித்து விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கோரிக்கையை மறுத்த கமலநாதனை தொண்டைப் பகுதியில் குத்தியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.