புதுடில்லி, ஜன 20 – ”என் மனைவி, சுனந்தா மரணம் குறித்து விசாரணை நடத்த, முழு ஒத்துழைப்பு அளிப்பேன்,” என்று மத்திய அமைச்சர் சசி தரூர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டில்லி ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில், மர்மமான முறையில், கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். இவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சுனந்தா மரணம் குறித்து நேற்று அமைச்சர் சசி தரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது. டில்லி துணை கலெக்டர் முன்னிலையில், சசி தரூர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
தன்னிடம் விசாரணை நடத்தப்படலாம் என தெரிய வந்ததும், சசி தரூர், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு எழுதிய கடிதத்தில், ‘விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என, உறுதி அளித்து உள்ளார்.
ஐ.நா., அமைப்பில் உயர் அதிகாரியாகவும், மத்திய அமைச்சராகவும் உள்ள சசி தரூர் அளித்த வாக்குமூலம், மிக முக்கியமானது.
இதில் உள்ள தகவல்கள், சுனந்தா திடீர் மரணத்திற்கான முடிவு குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களை விளக்க உதவக்கூடும் என கூறப்படுகிறது.