ஜனவரி 22 – தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91. கடந்த சில மாதங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் தீவிர மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவரது உடல்நிலை மோசமானது. உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2.45 மணியளவில் காலமானார்.
நாகேஸ்வரராவின் மனைவி அன்னபூர்ணா முன்பே காலமாகிவிட்டார். இவர்களுக்கு மகன்கள் வெங்கட், நடிகர் நாகார்ஜுனா, மகள்கள் சத்தியவதி, நாகசுசீலா, சரோஜா ஆகியோர் உள்ளனர்.
நாகேஸ்வரராவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக ஐதராபாத்தில் உள்ள அவரது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகேஸ்வரராவின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
நாகேஸ்வரராவ் தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் என்பதோடு, அவருக்கு 1957ல் நடசாம்ராட், 1968ல் பத்மஸ்ரீ, 1977ல் கலாபிபூர்ணா, 1989ல் ரகுபதி வெங்கய்யா, 1993ல் கவுரவ டாக்டர், 1995ல் தமிழக அரசின் அண்ணா விருது, 1996ல் என்டிஆர் தேசிய விருது, 1998ல் பத்மபூஷண், 2011ல் பத்ம விபூஷண், 2012 ல் வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.