Home கலை உலகம் தமிழ்ப்பட ரசிகர்கள் மறக்க முடியாத ‘தேவதாஸ்’ – நாகேஸ்வர ராவ்!

தமிழ்ப்பட ரசிகர்கள் மறக்க முடியாத ‘தேவதாஸ்’ – நாகேஸ்வர ராவ்!

798
0
SHARE
Ad

Nageswara-Rao,son-&-grand-sonஜனவரி 22 – தெலுங்குப் படவுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து இன்று இந்த பூவுலகை விட்டு மறைந்துவிட்ட நாகேஸ்வர ராவ், தெலுங்குப் பட ரசிகர்களை மட்டுமல்லாமல், தமிழ்ப்பட ரசிகர்களின் நினைவுகளிலும்  நெஞ்சங்களிலும் நிலைத்து நின்றவராவார்.

#TamilSchoolmychoice

1924ஆம் ஆண்டு பிறந்து, 70 ஆண்டு கால திரைப்படப் பயணத்தில் சுமார் 256 படங்களில் நடித்து சாதனை புரிந்து   தனது 89வது வயதில் குடல் புற்று நோய் காரணமாக இன்று புதன்கிழமை (22 ஜனவரி 2014) அதிகாலையில் நாகேஸ்வர ராவ் காலமானார்.

இந்தக் கால பெரிசுகள்’, தங்களின் இளமைக் காலத்தில்,  திரையரங்க வாசல்களில் தவம் போல வரிசையில் நின்று, கிறங்க கிறங்கப் பார்த்து ரசித்த காதல் காவியப் படங்களுள் ஒன்று தேவதாஸ்’.

அந்தப் படத்தின் கதாநாயகன்தான் நாகேஸ்வர ராவ். காதல் தோல்வியைக் காவியமாக்கிய தேவதாஸ் என்ற வங்காள மொழி நாவல் தமிழிலும் படமாகியபோது,‘ஓ பார்வதி… என்ற உற்சாகப் பாடலோடு நடிகை சாவித்திரியோடு திரையில் தோன்றி, பின்னர் உலகே மாயம், வாழ்வே மாயம் என தனது காதல் தோல்வியை சோகரசம் ததும்பப் பாடி, தமிழ்ப்பட ரசிகர்களின் உள்ளங்களில் ஊடுருவி சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் நாகேஸ்வர ராவ்.

தேவதாசுக்குப் பின்னர், எத்தனையோ காதல் காவியத் திரைப்படங்கள் வெளிவந்தாலும், எத்தனையோ கதாநாயகர்கள் சோகத்தோடு காதல் தோல்விப் பாடல்களை பாடி நடித்தாலும், காதல் தோல்வியைப் பாடி நடிக்கும் கதாநாயகன் என்றால் இன்றைக்கும் ரசிகர்களின் நினைவுக்கு வருவது நாகேஸ்வர ராவ்தான்.

பின்னர் பல தமிழ்ப்படங்களில் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத கதாநாயகனாக நடித்தார். ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு படத்தில் இறுதிக்காட்சிகளில், சரோஜாதேவியைக் கரம் பிடிக்கும் மாப்பிள்ளையாக நாகேஸ்வர ராவ் அமைதியான தோற்றத்துடன் வந்ததையும் பழைய பட ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.

அமைதியான நடிப்பை வழங்கிய நடிகராகத் திகழ்ந்த நாகேஸ்வர ராவ், காலப்போக்கில் ஏனோ தமிழ்ப் பட உலகில் பிரகாசிக்க முடியவில்லை. அவராக ஒதுங்கிக் கொண்டாரா, அல்லது வாய்ப்புகள் கிடைக்கவில்லையா என்பது சரியாகத் தெரியவில்லை.

சிவாஜி கணேசனின் ஆர்ப்பாட்டமான, ஆக்ரோஷமான நடிப்பும், எம்.ஜி.ஆரின் துள்ளலும் ஸ்டைலும் கலந்த உற்சாக நடிப்பும் தமிழ்ப்பட ரசிகர்களை ஈர்த்த அளவிற்கு, நாகேஸ்வர ராவின் அமைதியான, பண்பான, அடக்கி வாசிக்கும் நடிப்பு ஏனோ அவர்களை ஈர்க்கவில்லை.

தெலுங்குப் படவுலகம் கொண்டாடிய நாகேஸ்வர ராவ்!

ஆனால், ஆந்திர மாநிலத்தின் தெலுங்குப் படவுலகமோ, நாகேஸ்வர ராவை இரு கரம் நீட்டி, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.

தெலுங்குப் படவுலகில் ஒருபுறம் என்.டி.ராமராவ் சூப்பர் ஸ்டாராகத் திகழ இன்னொரு புறத்தில் நாகேஸ்வர ராவ் ஜொலிக்கத் தொடங்கினார். படிப்படியாக தமிழ்ப் படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொள்ளத் தொடங்கினார்.

இடையிடையே சில தமிழ்ப் படங்களில் தோன்றியவர் பின்னர் தமிழ்ப் படங்களில் நடிப்பதை நாளடைவில் முற்றாக நிறுத்திக் கொண்டார்.

இங்கே, தமிழ்ப்பட உலகை சிவாஜி கணேசனும், எம்.ஜி.ஆரும் இரு துருவங்களாக இருந்து கொடி கட்டி ஆள, அங்கே தெலுங்குப் பட உலகில் என்.டி.ராமராவும், நாகேஸ்வர ராவும் கோலோச்சத் தொடங்கினர். ராமராவ், என்.டி.ஆர் என்ற சுருக்கப் பெயரோடு புகழ் பெற ஏஎன்ஆர் என்ற பெயரோடு நாகேஸ்வர ராவ் தெலுங்குப் படங்களில் புகழ் பெறத் தொடங்கினார்.

தமிழில் சிவாஜி நடிக்கும் கதாபாத்திரங்களில், தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடிப்பதும், தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த படங்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது அதில் சிவாஜி நடிப்பதும் தொடர்ந்தது.

உதாரணமாக, தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்து சக்கைப் போடு போட்ட பிரேம் நகர் என்ற படம் தமிழில் வசந்த மாளிகையாக உருவானபோது அதில் சிவாஜி நடித்து அதனை வெற்றிப்படமாக்கினார்.

அதேபோல, தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் தெலுங்கு மொழிமாற்றம் கண்டபோது அதில் என்.டி.ராமராவ் நடிப்பதும், தெலுங்கில் அவர் நடித்த படங்கள் தமிழுக்கு வந்தபோது அதில் எம்.ஜி.ஆர் நடிப்பதும் ஒரு கலாச்சாரமாகவே தொடர்ந்தது.

தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்து வெற்றி கண்ட ராமுடு தேமுடு என்ற படம்தான் பின்னர் எம்.ஜி.ஆர் நடிப்பில் எங்க வீட்டுப் பிள்ளையாக சக்கைப் போடு போட்டது.

வயதான பின்னர் தெலுங்குப் படங்களில் நடிப்பதையும் நாகேஸ்வர ராவ் குறைத்துக் கொண்டாலும், தனது முதிர்ந்த வயதில் கூட தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

அண்மையில்கூட, ஒரு படத்தில் அவரும் அவரது மகன் நாகார்ஜூனாவும், நாகார்ஜூனாவின் மகனும் – ஆக மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

மூன்று தலைமுறைகளைக் கண்ட நடிகர்

நாகேஸ்வர ராவின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தான் திடகாத்திரமாக வாழும் காலத்திலேயே, தனது மகனும் தனது பேரனும் நடிக்க வந்து புகழ்க் கொடி நாட்டியதைப் பார்க்கின்ற பாக்கியம் அவருக்குக் கிட்டியதுதான்.

சிவாஜியும் அத்தகைய சரித்திரத்தைக் கொண்டவர்தான் என்றாலும், இன்றைக்கு தனது பேரன் நடிப்பதைக் காண அவர் உயிருடன் இல்லை. ஆனால், நாகேஸ்வர ராவ் காலத்திலேயே அவரது மகன் நாகார்ஜூனா, நடிக்க வந்து, தெலுங்குப் படவுலகின் முன்னணிக் கதாநாயகனாக உயர்ந்தார்.

தமிழில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த இதயத்தைத் திருடாதே மற்றும் ரட்சகன் போன்ற நேரடித் தமிழ்ப்படங்களிலும் நாகார்ஜூனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகேஸ்வர ராவின் பேரனும், நாகார்ஜூனாவின் முதல் மனைவியின் மகனுமான நாக சைதன்யாவும் இப்போது இளம் கதாநாயகனாக படங்களில் நடிப்பதைக் காணும் பாக்கியமும் நாகேஸ்வர ராவுக்குக் கிட்டியது.

சிம்பு நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திலும் நாக சைதன்யா நடித்திருந்தார் என்பதும், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் சிம்புவின் பாத்திரத்தில் நாக சைதன்யாதான் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகார்ஜூனா, நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா என இந்த மூன்று தலைமுறை நடிகர்களையும் ஒரே படத்தில் கதாபாத்திரங்களாக இணைக்கும் தெலுங்குப் படம் மனம் தற்போது படப்பிடிப்பில் இருந்து வருகின்றது. இந்தப்படம் தான் நாகேஸ்வர ராவ் நடித்த கடைசிப் படமாகும். இந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே நாகேஸ்வர ராவ் காலமாகிவிட்டார்.

தமிழ்ப்பட ரசிகர்களின் கண்களுக்கு தேவதாஸ் என்ற காவிய கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துக் காட்டிய நாகேஸ்வர ராவ், தமிழ்ப்பட சரித்திரத்தில் என்றும் நிலைத்திருப்பார்.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

-இரா.முத்தரசன்