Home கலை உலகம் பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவுக்கு புற்றுநோய்!

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவுக்கு புற்றுநோய்!

615
0
SHARE
Ad

Akkineni-Nageswara-Rao

ஐதராபாத், அக் 22- ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரே கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்தவர். சமீபத்தில் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

#TamilSchoolmychoice

இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில்தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த நாகேஸ்வரராவ், தனக்கு புற்றுநோய் இருக்கும் தகவலை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “எனக்கு புற்றுநோய் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த நோய் எனக்கு மிகுந்த மன தைரியத்தையும், வலிமையையும் கொடுத்துள்ளது. நான் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்து வருகிறேன். எனவே இந்த புற்று நோய் எனக்கு எந்த தீங்கையும் செய்யாது” என்றார்.

மேலும், “ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளாகிய உங்கள் ஆசீர்வாதத்தால், நான் நூறு வயதையும் கடந்து வாழ்வேன். நான் டாக்டரின் தீவிர கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் சிகிச்சை பெற்று வருவதால், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் என்னை சந்திக்கவோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவோ வேண்டாம்” என்றும் அப்போது நாகேஸ்வரராவ் கேட்டுக்கொண்டார்.

‘தர்மபத்தினி’ என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகுக்கு வந்த நாகேஸ்வர ராவ், சுமார் 71 ஆண்டுகளாக பல தலைமுறைகளை கடந்து நடித்து வருகிறார். ‘இட்டாரு மித்ருடு’ என்ற படத்தில் நாட்டிலேயே முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்த இவர், ‘நவராரி’ என்ற படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார். இது தமிழில் சிவாஜி கணேசன் நடித்த ‘நவராத்திரி’ என்ற படத்தின் தெலுங்கு மறு ஒளிபதிவு ஆகும்.

நாகேஸ்வரராவ் தனது மகன் நாகார்ஜூனா, பேரன் நாக சைதன்யா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள ‘மனம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பு மட்டுமின்றி ‘அன்னபூர்ணா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார்.

இந்தியாவில் திரைப்படத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றுள்ள நாகேஸ்வர ராவ், தனது சிறந்த நடிப்புக்காக ‘பத்ம விபூஷண்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் தேசிய அளவில் திரைப்படத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு முதல் இவரது பெயரில் ‘ஏ.என்.ஆர். தேசிய விருது’ வழங்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.