Home நாடு ம.இ.கா. தலைமைப் பொருளாளர் ரமணன் 5.5 மில்லியன் திரும்ப செலுத்த நீதிமன்றம் உத்தரவு

ம.இ.கா. தலைமைப் பொருளாளர் ரமணன் 5.5 மில்லியன் திரும்ப செலுத்த நீதிமன்றம் உத்தரவு

942
0
SHARE
Ad

datuk-ramanan-micகோலாலம்பூர், ஜனவரி 23 – அண்மையில் ம.இ.காவின் தலைமைப் பொருளாளராக நியமிக்கப்பட்ட டத்தோ ஆர்.ரமணன் (படம்) பிரபல மனநல மருத்துவர் டாக்டர் எம்.மகாதேவனிடம் இருந்து மோசடித்தனமாகப் பெற்ற 5.5 மில்லியன் ரிங்கிட்டை திரும்ப செலுத்த வேண்டுமென இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

உயர்நீதிமன்ற ஆணையர் லீ ஹெங் சியோங் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ரமணன் டாக்டர் மகாதேவனிடம் தவறுதலாக தன்னை பிரதிநிதித்துக் கொண்டார் என்றும் அதன்வழி அந்தப் பணத்தை டாக்டர் மகாதேவன், ரமணனின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு கடந்த 19 மே 2010ஆம் நாள் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தார் என்றும் நீதிமன்ற ஆணையர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

சுங்கைப் பட்டாணியில் இருக்கும் மகாதேவனுக்குச் சொந்தமான நிலத்தின் மீது மேற்கொள்ளப்படவிருந்த புதிய நகர வீடமைப்புத் திட்டத்திற்காகத்தான் அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது என்பதையும் ரமணன் தனது வாதத்தில் நிரூபிக்கத் தவறிவிட்டார் என்றும் நீதிமன்ற ஆணையர் கூறினார்.

14 நாட்களுக்குள் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும்

ரமணன் 5.5 மில்லியன் பணத்தை இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற ஆணையர் உத்தரவிட்டார்.

ரமணனின் வழக்கறிஞர் இந்த உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டபோது, அதற்கான முறையான விண்ணப்பத்தை ரமணன் தரப்பினர் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிமன்ற ஆணையர்  தெரிவித்தார்.

85 வயதான டாக்டர் மகாதேவன், ஒரு முன்னாள் அரசு மனநல மருத்துவராவார். மலேசிய மனநல மருத்துவ சங்கத்தின் நிறுவனரும் அவர்தான். இன்று நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் இருந்தார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த வழக்கின் வாதியான டாக்டர் மகாதேவன் சுங்கைப் பட்டாணியிலுள்ள தனது நிலத்தை தற்காப்பு அமைச்சு 1968ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டுவரை பயன்படுத்தியதற்காக 26.6 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

2010 மே மாதம் வாக்கில், டாக்டர் மகாதேவனைச் சந்தித்த ரமணன் இந்த இழப்பீட்டுத் தொகையை தன்னால் பெற்றுத் தர முடியுமெனக் கூறி அதற்காக 6.5 மில்லியன் ரிங்கிட் தனக்குத் தரப்பட வேண்டுமெனக் கோரியுள்ளார். பின்னர் இந்த தொகை 5.5 மில்லியன் ரிங்கிட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டு, அந்த தொகையும் ரமணன் வசம் கொடுக்கப்பட்டது.

தான் சமர்ப்பித்த வாதத் தொகுப்பு ஆவணங்களில் டாக்டர் மகாதேவன், பிரதிவாதி ரமணன் கொடுத்திருந்த ஏப்ரல் 2010 தேதியிட்ட தற்காப்பு அமைச்சின் கடிதம் ஒன்றையும் இணைத்திருந்தார். அந்த கடிதத்தின்படி டாக்டர் மகாதேவன் கேட்ட இழப்பீட்டுத் தொகையைத் தற்காப்பு அமைச்சு வழங்குவதாக அங்கீகரித்திருந்தது.

வழக்கு நடந்தபோது வாதி டாக்டர் மகாதேவன் சார்பாக 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் தற்காப்பு அமைச்சைச் சேர்ந்த நால்வரும் கையெழுத்துப் பிரதி நிபுணர் ஒருவரும் அடங்குவர். இந்த சாட்சிகள் அனைவரும் அத்தகைய எந்த கடிதமும் தற்காப்பு அமைச்சிடமிருந்து உண்மையில் வெளியிடப்படவில்லை என்று வாக்குமூலம் தந்தனர்.

ரமணன் சார்பாக, அவரும் அவரது தந்தையும் உள்ளிட்ட ஆறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.